புதுச்சேரி அருகே காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 74 தண்டனை கைதிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்னியா உத்தரவின் பேரில் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 12ஆம் தேதி நடந்த சோதனையில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் என்ற கைதியிடம் இருந்து ஒரு செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், குடும்பத்தினரை சந்திக்க விடுவதில்லை என கூறியும் 50க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 2 பிரிவாக பிரிந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்கள் முன்பு 16 கைதிகள் சிறையில் உணவு அருந்தும் தட்டினால் கைகளை அறுத்தும், பினாயில் குடித்தும், ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
காரைக்கால் டவுன் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் (வயது 42). இவர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்ததால் இரு வேளையும் இன்ஸுலின் ஊசி செலுத்தி கொள்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் மதியம் உடல் நிலை சரியில்லை என சிறை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், சிகிச்சையின் போது திடீரென மயங்கி விழுந்த அவரை சிறை காவலர்கள் அருகே இருந்த தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர் ஆனால் அசோக் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் அசோக்குமார் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காலாப்பட்டு சிறையில் அடிக்கடி செல்போன் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்துவதாக கூறி அங்குள்ள கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அசோக்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை காலாப்பட்டு சிறையில் 11 கைதிகள் தற்கொலை முயற்சி- ஆணிகளை விழுங்கியதால் பரபரப்பு...!