ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கும், கடந்தாண்டு வருமான வரித்துறை சோதனையில் ரூ.351 கோடியுடன் சிக்கிய காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாஹூவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 


ஹேமந்த் சோரன் கைது:


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி, காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், சட்டவிரோதமாக சுரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து அதன்மூலம் பண பலன்கள் அடைந்ததாக 2022 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 


இதனை சாதகமாக கொண்டு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்து வந்தது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனை 7 முறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக சொல்லியும், அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் தடாலடியாக முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் வீட்டுக்குள் நுழைந்து விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின் 2 சம்மன்கள் அவருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனை அதிரடியாக கைது செய்தது. 


காங்கிரஸ் எம்.பி.க்கு தொடர்பா?


இப்படியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக அவர் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர். இதனிடையே அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீதான ஊழல் புகார் மீது நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. 


அதாவது, ‘காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் சுமார் ரூ.351 கோடி அளவுக்கு கருப்பு பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் 5 நாட்களாக எண்ணப்பட்ட நிலையில் தீரஜ் சாஹூ தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். தீரஜ் சாஹூவிடம் பணம் கைப்பற்ற நிகழ்வை கடுமையாக விமர்சித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டார்.


அமலாக்கத்துறை விசாரணை:


ஆனால் அவரிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்ட நிகழ்வுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் கொடுத்தது. இந்த நிலையில் தான் தீரஜ் சாஹூவுக்கும், ஹேமந்த் சோரனுக்கும் இடையே தொடர்பு உள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது உள்ளிட்ட அடுத்தக்கட்ட விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.