நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்திற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


அதன்படி சங்கர் லால் குமாவத் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐஏஎஸ் அதிகாரியான அரவிந்தன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.




இதற்கான அறிவிப்பானையை இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் ராகுல் சர்மா, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.


முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து 2 நாட்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்திய முழுவதும் 96 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 47 கோடி பேர் பெண்கள் எனவும், 1.73 கோடிக்கும் மேற்பட்டோர் 18 முதல் 19 வயது பிரிவை சேர்ந்தவர்கள் எனவும், அதாவது முதல் முறை வாக்காளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 18 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.