நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டதொடர் வரும் 10 ஆம் முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வுப்பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளித்தார்.






அப்போது பேசிய பிரதமர் மோடி, பதவிக்காலம் முடிவுக்கு வரும் மன்மோகன் சிங்கை பாராட்டி பேசினார். அவரது உரையில், “டாக்டர் மன்மோகன் சிங்கை இன்று நினைவுகூர விரும்புகிறேன், அவரது பங்களிப்பு மகத்தானது. இவ்வளவு காலமாக, இந்த நாடாளுமன்றத்தையும் நாட்டையும் அவர் வழிநடத்திய விதம் மூலம் அவர் நினைவுக்கூரப்படுவார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆறு முறை இந்த அவையை அலங்கரித்துள்ளார்.






கொரோனா காலத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு உறுதுணையாக நின்றனர். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க வீல் சேரில் வந்து தனது கடமையை மன்மோகன் சிங் ஆற்றினார். இந்த அவையில் இருந்து ஓய்வு பெற  இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எனது பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.