மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலான கால அளவில் கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணைப் பணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள பணிநியமன விதிமுறைகளுக்கு எதிராக பெண்களுக்கான டெல்லி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது. கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்த விதிமுறைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டித்து வரும் நிலையில், இதுகுறித்து இந்தியன் வங்கி தரப்பில் பதில் கூறப்படவில்லை. 


கடந்த ஜனவரி மாதம், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இதே போல பணிநியமனத்திற்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டு அதில் மூன்று மாதங்களுக்கும் மேலாக கர்ப்பக் காலத்தை அடைந்திருக்கும் பெண்கள் `தற்காலிகமாக தகுதியற்றவர்கள்’ எனக் கருதப்பட்டு, குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு பணியில் இணையலாம் எனக் கூறப்பட்டிருந்தது. 


இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்த பிறகு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இந்தப் பணிநியமன விதிமுறைகளை மாற்றியமைத்தது. 



தற்போது இந்தியன் வங்கிக்கு பெண்களுக்கான டெல்லி ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் இந்தியன் வங்கியின் நடவடிக்கை பாகுபாடு காட்டுவதாகவும், சட்ட விரோதமாக இருப்பதாகவும், 2020ஆம் ஆண்டின் `சமூகப் பாதுகாப்பிற்கான குறியீட்டில்’ கொடுக்கப்பட்டுள்ள பேறுக்கால நன்மைகளுக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறி பாலினம் கருதி பாகுபாடு காண்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகளின் கீழ், பணிநியமனம் பெறுபவர்கள் நியமனம் பெற்ற 6 வாரங்களுக்குப் பிறகு உடற் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், `பெண் பணியாளர் இந்தப் பரிசோதனையில் 12 வாரங்கள் அல்லது அதற்கும் மேல் கர்ப்பிணியாக உள்ளார் எனக் கண்டுபிடிக்கப்படுமானால், அவர் தற்காலிகமாக தகுதியற்றவர் எனக் கருதப்படுவார்’ எனக் கூறப்பட்டுள்ளது. `குழந்தை பிறகு 6 வாரங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் பணியாளர் பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்று பெற வேண்டும்’ என இந்திய வங்கியின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த விவாகரம் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதியுள்ளதாக பெண்களுக்கான டெல்லி ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறும், இந்த விதிமுறைகளைப் பின்வாங்குமாறும், இந்த விதிமுறை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் குறித்து விளக்கமாக வரும் ஜூன் 23க்குள் அறிக்கை அமர்ப்பிக்க வேண்டும் எனவும் பெண்களுக்கான டெல்லி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


பெண்களுக்கான டெல்லி ஆணையம் தலைவர் ஸ்வாதி மாலிவார் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் விதிமுறைகளைக் குறித்து புகார் அளித்துள்ளதோடு, பெண்களுக்கு எதிராக சட்டவிரோதமான விதிமுறைகளை வங்கிகள் மேற்கொள்ளாமல் இருக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு, உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.