துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி இன்று (செப்.11) காலமானார். அவருக்கு 99 வயதாகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்சிங்பூரில் அமைந்திருக்கும் ஸ்ரீதம் ஜோதீஸ்வர் ஆசிரமத்தில் இன்று மாலை 3.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி குரு பகவான் சங்கராச்சாரியர் 4 மடங்களை உருவாக்கினார். இந்து மதத்தை போற்றிப் பாதுகாத்து வளர்த்தெடுக்க அவை நிறுவப்பட்டன. இந்த 4 மடங்களில் ஒன்றின் குரு தான் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி. இவர் ஜோதிர் மட பொறுப்பையும் கவனித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு, ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் 95வது பிறந்தநாள் விருந்தாவனில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி 1924ல் பிறந்தவராவார்.
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டம் திகோரி கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி பிறந்தார். 9 வயதிலேயே அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறி ஆன்மீகத் தேடலைத் தொடங்கினார். வேதங்களை, இதிகாசங்களை கற்றறிந்தார். ஸ்வாமி கர்பத்ரி மகாராஜ் தான் அவருடைய குருவாக இருந்தார். ஆன்மீகம் மட்டுமல்ல தேசியமும் அவர் கொள்கையாக இருந்தது. அவர் சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 1942ல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். அதனால் அவரை புரட்சிகர சாது என்றே அழைத்தனர். அயோத்தியில் ராமர் கோயிலை எழுப்ப இவர் பெரும் பங்காற்றியுள்ளார். ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி தனது 99வது பிறந்தநாளை அண்மையில் தான் ஹரியாளி தீஜில் கொண்டாடினார்.
இந்நிலையில் அவர் இன்று மறைந்தார். குஜராத்தில் உள்ள துவாரகா பீடம் மற்றும் உத்தரகாண்ட்டில் உள்ள ஜோதிர் மடம் ஆகிய இரண்டுக்கும் தலைவராக இருந்து வந்த ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அகில பாரதிய ராம ராஜ்ஜிய பரிஷத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்:
ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் தனது இரங்கல் குறிப்பில், ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை பின்பற்றுபவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சனாதன தர்மத்தை பரப்புவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தி இந்தியில் இரங்கல் குறிப்பைப் பதிவு செய்துள்ளார்.