ஹோலி கொண்டாட்டத்தில் போதையில் பாலிவுட் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்த இளைஞர் உற்சாத மிகுதியில் தன்னைத்தானே குத்திக் கொண்டதால் உயிரிழந்தார்.


மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வெள்ளிக்கிழமை ஹோலிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்தூரின் பான் கங்கா காலனியில் அதிகாலையில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் ஒரு சில ஆண்கள் போதையில் வண்ண தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாலிவுட் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டும் கொண்டிருந்தனர். அப்போது கோபால் சோலாங்கி என்ற 38 வயது இளைஞர் கட்டுக்கடங்காத ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் கையில் கத்தியுடன் வேறு ஆடிக் கொண்டிருந்தார். ஆதலால் அவரிடமிருந்து சற்று விலகியே மற்றவர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். திடீரென அந்த நபர் ஆடிக் கொண்டே தனது இதயத்தில் வேகமாக கத்தியை இறக்கினார். அந்த நிமிடத்திலேயே ரத்தம் பீறிட்டுப் பாய கீழே சரிந்தார்,


சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்துபோய் அவரை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த நபர் மனைவியைப் பிரிந்து குழந்தைகள் மற்றும் தாய், தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த நபர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மது போதையில் கத்தியால் குத்திக் கொண்டாரா இல்லை வேறு ஏதும் காரணம் இருந்ததா என்று உறவினர்கள் நண்பர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




ஹோலி பண்டிகையின் வண்ணப் பின்னணி:


ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு அதாவது வசந்த காலத்தை வரவேற்க கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.
பொதுவாக பனி காலத்திலிருந்து வெயில் காலம் மாறுவதை வசந்த காலம் என்பர். இந்த வசந்த காலத்தில் நச்சுயிரி சார்ந்த காய்ச்சல் சளியும் ஏற்படும். இதனை எதிர்கொள்ளும் விதமாக, ஹோலி பண்டிகை அன்று இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை ஒருவர் மீது ஒருவர் ஏறிந்தும் தண்ணீரில் கலந்து பீய்ச்சியும் விளையாடுகின்றனர். இந்தப் பொடிகள் ஆயுர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கும் எனக் கருதப்பட்டது.


ஆனால் நாளடைவில் இது வெறும் ரசாயனப் பொடியாக மாறிவிட ஹோலிக்குப் பின்னர் கண் எரிச்சல், தோல் எரிச்சல், மூச்சுத் திணறலில் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளது.
ஹோலி பண்டிகையண்று இளையோர் வீட்டுப் பெரியவர்களை சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெறுவர். ஒருவொருகொருவர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வண்ணப் பொடிகளைத் தூவி திலகமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பண்டிகை என்றால் பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா? ஹோலி அப்படியொரு பண்டிகை. ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தெருவில் இறங்கி வண்ணம் தூவி பேதம் மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பர்.  ஹோலிப் பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும்  மகிழ்விப்பதாக ஐதீகம் உள்ளது.


ஹோலிகா தகனம்:


பொங்கலுக்கு முன் நம்மூரில் போகி வருவதுபோல் ஹோலிக்கு முந்தைய நாள் வடக்கில் ஹோலிகா தகனம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்கின்றனர். நெருப்பு எரியும் போது ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். பின்னர் தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள்.