இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தொடரும் ரயில் விபத்துகள்:
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர் மாவட்டத்தில் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 4 பேரின் உயிரை காவு வாங்கியது. இறப்புகள் ஏற்படாத ரயில் விபத்துகள் பல கடந்தாண்டு நிகழ்ந்துள்ளது.
ரயில் விபத்துகளை தவிர்க்க, ரயில் பாதுகாப்பு கருவிகளை நவீனமயமாக்க வேண்டும் என தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. புதிய ரயில்களை இயக்குவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரயில் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாபில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சரக்கு ரயில் ஒன்று ஓட்டுனர் இன்றி 70 கி.மீ. தூரத்திற்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் இன்றி சென்ற ரயிலால் பரபரப்பு:
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ரயிலில் இருந்து இறங்குவதற்கு முன் கை பிரேக்கை இழுக்க டிரைவர் மறந்துவிட்டார். பதான்கோட் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. பிரேக்கை இழுக்க மறந்ததால் டிராக்கில் இருந்த ரயில் இயங்க தொடங்கியது. சரக்கு ரயில் - கற்களை ஏற்றிக்கொண்டு மணிக்கு 100 கிமீ வேகத்தில் சுமார் ஐந்து நிலையங்களைக் கடந்துள்ளது.
பின்னர், உஞ்சி பஸ்ஸியில் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் மரக்கட்டைகளை போட்டு ரயில்வே அதிகாரிகள் ரயிலை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 53 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட சரக்கு ரயில் பஞ்சாபிலிருந்து ஜம்மு செல்லவிருந்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதா? என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம். இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார். ரயில் நிலையங்களில் ரயில்கள் வேகமாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.