Andhra Train Mishap: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா ரயில் விபத்து:
ஆந்திர மாநிலம் , விஜயநகரம் மாவட்டம், கந்தகப்பள்ளியில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில், இரவு 7 மணியளவில் ராயகட பயணிகள் ரயில் பின்னால் இருந்து விசாகப்பட்டினம் பலாசா ரயிலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதற்கு காரணம் அந்த ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தங்களது தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து தான், என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கவனச் சிதறல்களை தடுக்க நடவடிக்கை
இந்திய ரயில்வேயால் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ், ”சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விபத்தானது, பணியின் போது லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கிரிக்கெட் போட்டியை கண்டதால் ஏற்பட்ட கவனத்தை சிதறலால் நிகழ்ந்துள்ளது. இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து, ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் கவனமாக இருப்பதை உறுதிசெய்யும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். ரயிலை பாதுகாப்பாக இயக்குவதில் முழு கவனம் செலுத்துகிறோம்.
பாதுகாப்பில் கவனம்:
நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிய முயற்சிப்போம், அது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர்களின் (CRS) உத்தியோகபூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், விபத்து நடந்த உடனேயே ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ”ராயகட பாசஞ்சர் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுனர் மோதியதில் தவறு இருப்பது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, குறைபாடுள்ள இரண்டு ஆட்டோ சிக்னல்களை அவர்கள் புறக்கணித்தனர்” என்பது தெரிய வந்தது. இந்த விபத்தில் இரு பணியாளர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.