மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளும் மிகவும் மும்முரமாக கூட்டணியில் இணைவதும் கூட்டணியில் சேர்வதுமாக உள்ளது. இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் கூட்டணியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A கூட்டணியும் பெரும் கவனிப்பை பெற்றுள்ளது. 


கூட்டணி பேச்சுவார்த்தையுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்றுவரும்போது, பாஜக தனது 195 வேட்பாளர்கள் பட்டியலையும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் அதிரடியாக கடந்த மார்ச் 2ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில், 195 வேட்பாளர்களில் மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் தொகுதியில் போஜ்பூரி பாடகர் பவன் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தான் போட்டியிடப் போவதில்லை என பவன் சிங் பின் வாங்கியுள்ளார். இது தொடர்பாக பவன் சிங் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை குறிப்பிடாமல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 


இந்நிலையில், போஜ்புரி பாடகரும், நடிகருமான பவன் சிங், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை இன்று அதாவது மார்ச் மாதம் 4ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளார். பாஜக தலைவரைச் சந்திக்க காலை 11:30 மணிக்குப் பிறகு சிங் நேரம் கேட்டுள்ளார். போஜ்புரி பாடகரும் நடிகருமான பவன் சிங் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அசன்சோல் தொகுதியில் போட்டியிட மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் ஜே.பி நட்டாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். பாஜகவின் 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது.  


போட்டியிட மறுக்க என்ன காரணம்? 


தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், ”பாரதிய ஜனதா கட்சியின் தலைமை மீது எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என்னை அன்சோல் தொகுதியில் போட்டியிட வேட்பாளராக அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி என் மீது வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.


பவான் சிங் பாடல்கள் பெண்களை கேவலமான முறையில் சித்தரிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருவதும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. 


195 வேட்பாளர்களில் உள்ள ஸ்டார் வேட்பாளர்கள் யார்? 


195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 34 மத்திய அமைச்சர்களின் பெயரையும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவார் என்று  பாஜக சனிக்கிழமை அறிவித்தது. இந்த பட்டியலில் இரண்டு முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்) மற்றும் பிப்லாப் தேப் (திரிபுரா) அத்துடன் ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் இருந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடவுள்ளனர். 


பாஜக மேலிடம் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பின்னர் ஒருவர் மறுத்திருப்பது, பாஜகவில் உட்கட்சி ஜனநாயகமே இல்லை போல, ஒருவரின் விருப்பத்தை அறியாமல் அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டுள்ளது.