ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி பிகாரில் நடைபெற்ற பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஏற்பாடு செய்திருந்த 'ஜன் விஸ்வாஸ் பேரணி'யில் உரையாற்றினார்.
லாலு பிரசாத் யாதவ் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கினார். பாட்னாவில் 'ஜன் விஸ்வாஸ் பேரணி'யில் உரையாற்றிய லாலு, "தாய் மறைவுக்குப் பிறகு தலை மற்றும் தாடியை மொட்டையடிக்காத பிரதமர் மோடி இந்து அல்ல. பீகார் பெரிய ஆளுமைகளை கொடுத்துள்ளது. ஜன் விஸ்வாஸ் பேரணி நடைபெற்ற காந்தி மைதானத்தில் நாட்டு தலைவர்கள் பலர் பேரணிகள், கூட்டங்கள் நடத்தியுள்ளனர். இங்கிருந்து நாடு முழுவதும் ஒரு செய்தி சென்றுள்ளது. பீகாரின் கருத்துக்கு நாட்டு மக்கள் மத்தியில் அவ்வளவு சக்தி உள்ளது. பீகார் என்ன முடிவு எடுக்கிறதோ அதை அப்படியே பின்பற்றுங்கள். நாளையும் அதுவே நடக்கும்.”ராஜா தசரதரின் மகன், ராமர், பீகாரில் உள்ள ஜனக்பூரில் திருமணம் செய்து கொண்டார். பல துணிச்சலான மனிதர்கள் பீகாரில் பிறந்தனர்” என்று பேசினார்.
பாஜக ஒரு குப்பைத் தொட்டி - தேஜஸ்வி யாதவ்
இந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ், ”மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பாஜகவினர் உடைக்கிறார்கள், ஆனால் அவர்கள் பொதுமக்களை எப்படி விலைக்கு வாங்குவார்கள்? பொதுமக்கள் பாஜகவினரின் இந்த செயலுக்கு பதிலளிப்பார்கள். சிலர் மோடியின் முன் மண்டியிட்டார்கள், ஆனால் நான் என் தந்தை (லாலு பிரசாத் யாதவ்) பற்றி பெருமைப்படுகிறேன், எனது தந்தை பலமுறை போராடினார். ஆனால் அவர் ஒருபோதும் தலைவணங்கியதில்லை. லாலு ஜி பயப்படாதபோது, அவரது மகன் பயப்படுவானா?".
”2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சித்தாந்தத்தின் போராட்டம் என்பதால் கடைசி வரை போராடுவேன் என்று உறுதியாகக் கூறுகின்றேன். சில சமயம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி, இப்போது உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமையும் போது, சிபிஐ அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும், பா.ஜ.க வாஷிங் மிஷினுக்குள் போனால் சுத்தமடைந்து விடுகின்றார். ஆனால் இப்போது பா.ஜ.க. ஒவ்வொரு கட்சியினரின் கழிவுகளும் சேரும் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது” என கடுமையாக சாடினார்.