நாட்டில் வரதட்சணை கொடுமையால் பல் பெண்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்துள்ளனர். வரதட்சணை கேட்டு பெண்களை கொலை செய்வது அல்லது அவர்களை கொடுமைபடுத்தி தற்கொலை செய்ய வைப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது.


மத்திய, மாநில அரசுகள், அரசு சாரா அமைப்புகளின் தொடர் நடவடிக்கையின் காரணமாக அது தற்போது குறைந்துள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி, வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் வரதட்சணை பெறுவது அல்லது கொடுப்பது ஒரு வன்செயல் குற்றமாகக் கருதப்படுகிறது. 


வரதட்சணை தடைச் சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒரு நபர் வரதட்சணை கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ அல்லது கொடுப்பதற்கோ வாங்குவதற்கோ ஊக்கமளித்தால், அவர் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையும், பதினைந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.


ஒப்பிட்டளவில் அது தற்போது குறைந்திருந்தாலும் அது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், வரதட்சணையால் நிகழ்ந்த மரணம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.


2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, நாட்டில் நாள் ஒன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்ததாக மத்திய அரசு பதில் அளித்துள்ளனது.


காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, 2017 முதல் 2021 வரை நாட்டில் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன.


2017 ஆம் ஆண்டில், 7,466 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. 2018 இல் 7,167 மரணங்களும் 2019 இல் 7,141 மரணங்களும் 2020 இல் 6,966 மரணங்களும் மற்றும் 2021 இல் 6,753 மரணங்கள் நிகழ்ந்ததாக எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.






அந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. அதாவது, அங்கு நாள் ஒன்றுக்கு ஆறு வரதட்சணை மரணங்கள் நிகழ்கிறது. 


2017 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், பீகாரில் 5,354, மத்தியப் பிரதேசத்தில் 2,859, மேற்கு வங்கத்தில் 2,389 மற்றும் ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 


தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2017ஆம் ஆண்டு 48 வரதட்சணை மரணங்களும் 2018ஆம் ஆண்டு 55 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.


2019ஆம் ஆண்டு, 28 பேரும் 2020ஆம் ஆண்டு, 40 பேரும் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தனர். 2021ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.