உத்தரபிரதேச மாநிலம் லம்புவா சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சியில்,  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், குடிப்பழக்கம் எப்படி தனது மகனை கொன்றது என்பதை நினைவு கூர்ந்தார். 


மதுப்பழக்கத்தால் எனது மகனை இழந்தேன்:


அந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர், "நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்ட தனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு, குடிப்பழக்கம் அதிகமானதும் அவரை  மறுவாழ்வு மையத்தில் சேர்த்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டார் என்ற நம்பிக்கையுடன், திருமணம் செய்து வைத்தேன். ஆனால், அந்த ஆபத்தான குடிப்பழக்கத்தை எனது மகன் மீண்டும் தொடங்க, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது ஆகாஷ் கிஷோரின் மகனின் வயது வெறும் 2 மட்டுமே.


குடிகாரனுக்கு பெண் தராதீர்கள்:


எம்.பி.யாக நானும், எம்.எல்.ஏ.வாக எனது மனைவி இருந்தும் கூட,  எங்கள் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியாதபோது, ​​​​பொதுமக்கள் எப்படி அதைச் செய்வார்கள். என்னால் எனது மகனைக் காப்பாற்ற முடியவில்லை, இதனால் அவரது மனைவி விதவை ஆனார். ஆனால், இதிலிருந்து உங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை நீங்கள் காப்பாற்ற வேண்டும். எனவே, குடிப்பழக்கம் கொண்ட நபர்களுக்கு, பொதுமக்கள் தங்களது மகள் மற்றும் தங்கைகளை திருமணம் செய்து கொடுக்கக் கூடாது. சிறந்த அதிகாரியை விட ஒரு கூலித்தொழிலாளி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர் ஒரு நல்ல மகனை உருவாக்குகின்றனர். 


ஆபத்தான குடிப்பழக்கம்:


குடிப்பழக்கம்  கொண்டவர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. பீர், ஒயின், விஸ்கி, ரம், ஓட்கா, ஜின் மற்றும் பிராந்தி மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்படும் அராக் மற்றும் கள் போன்றவை மிகவும் பிரபலமான மதுபானங்களாக உள்ளன. ஒரு நபர் தொடர்ந்து குடிப்பழக்கத்தில் ஈடுபடும் போது, ​​அது பிரச்சனைக்குரிய மற்றும் எதிர்மறையான உடல்நல விளைவுகளை அனுபவிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.


பள்ளிகளில் விழிப்புணர்வு அவசியம்:


சுதந்திரப் போராட்டத்தின் 90 ஆண்டுகளில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் 6.32 லட்சம் பேர் உயிர் தியாகம் செய்தனர், ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் போதைக்கு அடிமையாகி உயிரிழக்கிறார்கள். புற்றுநோயால் ஏற்படும் 80 சதவிகித உயிரிழப்புகளுக்கு, புகையிலை, சிகரெட் மற்றும் பீடிக்கு அடிமையாவது முக்கிய காரணமாக உள்ளது.  போதை ஒழிப்பு பரப்புரையை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்வதோடு, காலை தொழுகையின் போது இது தொடர்பான ஆலோசனைகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்" என்றும் மத்திய இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.