உலக புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்(Sudarsan Pattnaik) கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடற்கரையில் தக்காளியை கொண்டு பிரம்மாண்டமான சாண்டா கிளாஸ் தாத்தா சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.’




ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் (Gopalpur Beach) 1500 கிலோ தக்காளியை கொண்டு பிரம்மாண்டமாக சாண்டா தாத்த சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த சிற்பத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 27 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்ட சிற்பம் தக்காளியை வைத்து உருவாக்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் 'Merry Christmas' என்று வாழ்த்துகளையும் எழுதியுள்ளார்.






கடந்த 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சுதர்சன் 5400 சிகப்பு ரோஜாக்களை கொண்டு சாண்டா கிளாஸ் தாத்தாவை உருவாக்கி இருந்தார்.




கடந்த 17 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று சுதர்சன் சாண்டா தாத்தா சிற்பத்தினை உருவாக்கி வருகிறார். பதம் பூஷண் விருது பெற்றுள்ள இவர், உலக அளவில் 60-க்கும் மேற்பட்டுள்ள சர்வதேச மணல் சிற்ப கலை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.


உலகம் முழுவதும் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை இந்த ஆண்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.


மழைக்கு நடுவே சிறப்பு வழிபாடு


அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா இன்று களைக்கட்டியுள்ளது. 


நேற்று மாலையான ’கிறிஸ்தம்ஸ் ஈவ்’ தொடங்கி, நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள் வரை தேவாலயங்களில் தொடர்ந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை கொட்டத் தொடங்கியது. எனினும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் திரளாக தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


உலகம் முழுவதும் களைகட்டும் கொண்டாட்டம்


இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்தலகேம் கிறிஸ்துமஸ் விழாக் கோலம் பூண்டது.  கத்தோலிக கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகனில், ரோமன் கத்தோலிக சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.


இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருவதோடு தேசங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் எல்லைகளைக் கடந்து, பன்முகத்தன்மையை உள்ளடக்கிய ஒரு பண்டிகையாக கிறிஸ்துமஸ் நாள் மாறியுள்ளது.


கிறிஸ்துமஸ் தினம் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் குறிப்பது மட்டுமல்லாமல், அவர் இந்த பூமியில் எவ்வாறு நடந்து கொண்டார், அவரது மாண்பு, கருணை ஆகியவற்றை நினைவில் கொண்டு போற்ற வேண்டிய நாளாக பார்க்கப்படுகிறது.


மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த நாளில் ஒன்று கூடி வழிபட்டும்,  இயேசுவின் தியாகங்களுக்கு நன்றி செலுத்தியும், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி பரிசுகள் வழங்கியும் கொண்டாடுகின்றனர்.


மேலும் கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்களால் தங்கள் வீடுகளை அலங்கரித்து, கிறிஸ்துமஸ் தாத்தாவான சாண்டாகிளாஸ் போல் வேடமிட்டும், கேக் உள்ளிட்ட உணவுகளைப் பரிமாரியும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.