USA Tariff: வரி விவகாரங்கள் முடியும் வரை வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நிறுத்திவைப்பு:
பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதாக கூறி, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதுதொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும் வரை, இந்தியாவுடன் வர்த்தகம் குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, புதிய 50 சதவிகித வரி விதிப்புகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெறுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு, ”இல்லை, பிரச்னைகள் முடியும் வரை பேச்சுவார்த்தைகள் இல்லை” என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
அமலுக்கு வந்த வரி விகிதங்கள்:
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பதற்கான அரசாணையை நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. இதனால் மொத்த வரி விகிதம் 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 25 சதவிகிதம் வரி நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் அடுத்த 25 சதவிகிதம், 21 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள் அல்லது இந்தியா அல்லது பிற நாடுகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து, நடவடிக்கைகளை மாற்றியமைக்க அதிபருக்கு அதிகாரங்கள் இருப்பதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் டார்கெட்டிற்கு ரெட் அலெர்ட்:
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபரானது, இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பலமாகி வர்த்தகம் பெருகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை 2030ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால், ட்ரம்பின் நடவடிக்கைகள் தொடர்ந்து நேர் எதிராக உள்ளது. இந்தியாவின் வரி விதிப்பு முறையை கடுமையாக விமர்சித்ததோடு, ரஷ்யாவுடனான உறவு விவகாரத்தில் இந்தியாவிடம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக கூடுதல் வரியுடன், தடையில்லா வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இதனால், இனி எதிர்காலம் என்பது அமெரிக்காவும்-இந்தியாவும் தான் (Future Is AI) என அந்நாட்டின் நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி பேசியது எல்லாம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
கேள்விக்குறியான வர்த்தக ஒப்பந்தம்:
வெளிநாடுகள் உடனான வர்த்தகத்தை பெருக்குவதற்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி தடையில்லா வர்த்தகம் மேற்கொள்ள அண்மையில் தான் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐரோப்பியா நாடுகள் உடனான பேச்சுவார்த்தையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறைந்த விலையிலேயே இந்தியாவில் கிடைப்பதோடு, உள்நாட்டில் இருந்தும் அதிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். அத்தகைய ஒப்பந்தத்தின் முதற்கட்டம் அமெரிக்காவுடன் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரி விவகாரத்தால் அதற்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
பிரச்னை என்ன?
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தாண்டி, அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்துவிடாததே ட்ரம்பின் கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகள், விளைபொருட்கள் மற்றும் அசைவ பால் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து, வர்த்தகத்தை பெருக்க அமெரிக்க ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அப்படி செய்தால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, மத உணர்வும் சிதைக்கப்படும் என மத்திய அரசு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் விளைவாகவே தற்போது இந்த வரிப்போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது.