பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் அங்கே ஆதரவளிக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்தை மேடையில் இருந்து இறங்குமாறும் போராட்டத்தை அரசியாலாக்க வேண்டாம் என்றும் கோரியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண். இவர் பாஜக எம்.பி.யும் கூட. இவரும் சில பயிற்சியாளர்களும் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தருவதாக வீராங்கனைகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் தலைவர், பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று முதல் நடந்துவரும் இந்தப் போராட்டம் இப்போது சர்வதேச கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகத்தை கூண்டோடு மாற்ற வேண்டும். வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்களை வைத்துள்ளனர்.


மல்யுத்த வீரர்கள் வீராங்கனைகளின் போராட்டம் பெரிதாகி வரும் சூழலில் பாலியல் புகார்கள் குறித்துஇந்திய மல்யுத்த கூட்டமைப்பு   72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மல்யுத்த கூட்டமைப்பிற்கே மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனை தீவிரமான ஒன்றாக பார்க்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக 72 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். தவறினால், தேசிய விளையாட்டுத்துறை விதி 2011ன் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.


இந்தச் சூழலில் தான் இன்று பிற்பகல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் வருகை தந்தார். அப்போது அவர் அங்கு பேசுவதற்கு முற்பட்டார். ஆனால் அங்கிருந்த போராட்டக்காரர்கள், ''நீங்கள் தயவுசெய்து இங்கு எதுவும் பேச வேண்டாம். இந்தப் பிரச்சனை அரசியலாக்கப்படக்கூடாது. தயவு செய்து இதனை அரசியலாக்காதீர்கள். தயவு செய்து நீங்கள் சென்றுவிடுங்கள்'' என கோரினர். பிருந்தா காரத்திடம் மல்யுத்த வீரர்கள் கைகூப்பி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பிருந்தா காரத் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீது மிகவும் கடினமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள. இந்திய மல்யுத்த வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் குரலை கவனிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.