டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அருகே இன்று அதிகாலையில் ரியாலிட்டி சோதனைக்கக டெல்லி தெருக்களில் ஸ்வாதி மாலிவால் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது சரியாக அதிகாலை 3.11 மணியளவில் 47 வயதான ஹரிஷ் சந்திரா என்ற நபர் தனது பலேனோ காரில் வந்து ஸ்வாதி மாலிவாலை காரில் உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது ஸ்வாதி முடியாது என்று மறுத்துள்ளார். 


இதனால், அந்த நபர் தனது காரை எடுத்துக்கொண்டு ஸ்வாதிக்கு கடந்து வேகமாக சென்றுள்ளார். திடீரென காரை நிறுத்திய அந்த நபர் யூ-டர்ன் போட்டு ஸ்வாதி மாலிவால் அருகே வந்துள்ளார். தொடர்ந்து, அந்த நபர், ஸ்வாதியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தபோது, ஸ்வாதி அவனை பிடிக்க காரின் ஜன்னல் வழியே கையை உள்ளே விட்டுள்ளார். அப்போது, அந்த நபர் காரின் கண்ணாடியை மூடியதால் ஸ்வாதியின் கை சிக்கிகொண்டது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த நபர் காரை ஆன் செய்து ஓட்டி சென்றுள்ளார். சுமார் 10 முதல் 15 தூரம் ஸ்வாதியை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. ஸ்வாதியின் டீம் அவர்களுக்காக இங்கிருந்து சிறிது தூரத்தில் காத்திருந்த இந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்வாதி கொடுத்த புகாரின் பேரில், 47 வயதான ஹரிஷ் சந்திராவை காவல்துறையினர் கைது செய்தனர். 


டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் பேட்டி:


இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையர் தலைவர் ஸ்வாதி மாலிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது என்று நான் அதிகாலை 3 மணியளவில் டெல்லியில் உள்ள தெருக்களில் சோதனை மேற்கொண்டேன். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை முன்பு, எனது அருகே கார் ஒன்று நின்றது. அதில் இருந்த ஒரு நபர் என்னை காரில் ஏறும்படி வற்புறுத்தினார். ஆனால், முதலில் முடியாது என்று சொல்லிவிட்டேன். என்னை விட்டு நீண்ட தூரம் சென்ற கார், திரும்பி வந்து என் அருகில் நின்றது. என்னை மீண்டும் அந்த காரில் ஏறும்படி உள்ளே இருந்த நபர் சொல்லியபடி ஆபாசமாக பேசினார். தொடர்ந்து ஆபாசமான செயல்களிலும் ஈடுபட தொடங்கினார். இதனால் எனக்கு அதீத கோபம் வந்து, அந்த நபரை பிடிக்க காருக்குள் கையை விட்டேன். அந்த நேரத்தில் காரின் ஜன்னல் கண்ணாடியை உயர்த்தி விட்டு, காரை ஆன் செய்து ஓட்ட தொடங்கிவிட்டார். அவர் என்னை 10-15 மீட்டர் இழுத்துச் சென்றார். இதை பார்த்த என்னுடன் வந்த குழுவை சேர்ந்த நபர்கள் குரல் கொடுக்க, நானும் சத்தமாக கத்தினேன். அப்போது அந்த நபர் என்னைவிட்டு ஓடிவிட்டார். அந்த ஒரு நொடியில் என் மனதில் தோன்றியது என்னுடன் வந்த நபர் இல்லையெனில் அஞ்சலி போல் எனக்கும் நடந்திருக்கும்.






இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் என்னை அடையாளம் காட்ட சொன்னார்கள். நானும் அவரை அடையாளம் காட்டிவிட்டேன். அந்த நேரத்தில் அவர் குடித்து இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், டெல்லியில் உள்ள மற்ற பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகத்தான் உள்ளது” என்று தெரிவித்தார்.