ஊரடங்கு என்கிற வார்த்தையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம். நாட்களை கடந்து, வாரத்தை கடந்து, மாதங்களை கடந்து பல்வேறு சிரமங்களை கடந்து உயிர் காக்க கடைபிடிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு முதன் முதலாக பிறக்கப்பட்ட தினம் இன்று தான். உலக அளவில் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு அமல்படுத்த தீவிரமாகி்க் கொண்டிருந்த நேரத்தில், கடந்த 2020 மார்ச் 22ம் தேதி ‛மக்கள் ஊரடங்கு’ கடைபிடிக்க பிரதமர் மோடி முன்வைத்த கோரிக்கையை அந்த ஞாயிற்று கிழமை வெற்றிகரமாக அனைவரும் கடைபிடித்தனர்.
அதுமட்டுமின்றி பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் அதன் வெற்றியை கொண்டாடினர். அந்த நொடி வரை தெரியாது, பல மாதங்களுக்கு அது நீடிக்கப் போகிறது என்று. அதன் பிறகு தான் மார்ச் 24ம் தேதி முதல் அடுத்தடுத்த ஊரடங்கு அறிவிப்பும், அதன் நீட்டிப்பு அறிவிப்பும் பிரதமரால் வெளியாகிக் கொண்டிருந்தது. மாதக்கணக்கில் போடப்பட்ட ஊரடங்கை சமாளிக்கும் பக்குவத்தை மக்களுக்கு தந்தது முதன் முதலில் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு தான் . மக்கள் ஒற்றுமையாக அன்றைய தினம் ஊரடங்கை கடைபிடித்ததால் தான் அதை நீட்டித்து மக்களை காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை ஆளும் அரசுகளுக்கு வந்தது. அந்தவகையில் முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.
ஓராண்டு விரைவில் கடந்திருந்தாலும், திரும்பி பார்த்தால் அந்த ஓராண்டில் நாம் கடந்த சிரமங்கள் என்றும் நிழலாடும். பிரிவு, சோகம், நஷ்டம், இழப்பு, ஒற்றுமை, அன்பு, கட்டுப்பாடு என பலவற்றை நமக்கு கற்றுக்கொடுத்த ஊரடங்கை அவ்வளவு எளிதில் எப்படி மறக்க முடியும்? அத்தனை கட்டுப்பாடுகளை கடைபிடித்த நாம், அதை கடைபிடிக்கத் தவறியதால் இன்று மீண்டும் கொரோனா திரும்பியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த அதே அச்ச உணர்வு, இன்றும் இருக்கிறது என்றால் தவறு நம்மிடத்தில் தான் உள்ளது. தடுப்பூசிகள் வந்தாலும் தற்காப்பு அவசியம் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
முக கவசம், சமூக இடைவெளி,கைகளை சுத்தம் செய்தல் என்ற மூன்று விசயங்களை என்றும் நினைவில் வைத்தால் தான் கடந்த ஆண்டு கவலைகளை கடந்து இந்த ஆண்டு ஊரடங்கை தவிர்த்து இயல்பான வாழ்விற்குள் நாம் செல்ல முடியும். கடந்த ஆண்டு இதே நாளை உணர்ந்து, அனைவரும் விழித்திருப்போம், விலகி இருப்போம்.