கடனை திரும்பப் பெற வங்கிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.


நிதியமைச்சர் அறிவுறுத்தல்:


நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட சிறு கடன் வாங்கியவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது “சில வங்கிகள் எவ்வளவு இரக்கமின்றி கடனைத் திரும்ப பெறுகின்றன என்பது பற்றிய புகார்களை நான் கேள்விப்பட்டேன். கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறைக்கு வரும்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என்றும், அவர்கள் மனிதாபிமானத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்று அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது” என கூறினார்.


குவியும் குற்றச்சாட்டுகள்:


கடனை திருப்ப செலுத்த முடியாத பயனாளர்களை தனியார் வங்கிகள், முகவர்கள் மூலமாக மிரட்டப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சில இடங்களில் கடனை வசூலிக்க மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து மற்றும் வன்முறை பின்பறப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இந்த நிலையில் தான், அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடனை வசூலிக்க மோசமாக நடந்து கொள்ளக் கூடாது எனவும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.


உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?


வங்கிகள் நிலுவையில் உள்ள கடன் தொகையை திரும்பப் பெற வேண்டுமானால், சட்டப்படி நிறுவப்பட்ட நடைமுறையின்படி அதை வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் கூறியது. விவசாயிகள் பெற்ற கடனை வசூலிக்க வங்கிகள் கட்டாயப்படுத்தப்பட்ட முறைகளை பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பொது நலன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ”கடனை வசூலிக்க வங்கிகள் தனியார் முகவர்களை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட மாட்டாது" எனவும் அறிவுறுத்தியது. 


ரிசர்வ் வங்கி நடவடிக்கை;


வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட கடன வசூலிக்கும் முகவர்களால், பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அவற்றை முறையாக பின்பற்றாத வங்கிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. உதாரணமாக,  2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளில் மும்பையை தளமாகக் கொண்ட RBL வங்கியின் கடன் வசூலிக்கும் முகவர்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தது. அதனடிப்படையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் RBL வங்கி லிமிடெட் கடன் வசூலிக்கும் முகவர்கள் வழிகாட்டு நெறிமுறகளை மீறி நடந்து கொண்டதாக 2.27 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.