இந்தியாவில் தற்போதைய டாப் மருந்து நிறுவனங்களின் தலைவர்களாக இருப்பவர்கள், இந்தியா சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா, மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத் தலைவர் திலீப் சுரானா ஆகியோர். முதலில் கூறப்பட்ட இருவரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்புக்காக கொண்டாடப்பட்டு வருகையில், மூன்றாவதாக இருப்பவர் வேறு ஒரு காரணத்திற்காக கொண்டாடப்படுகிறார். திலீப் சுரானாவின் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் `டோலோ 650’ என்ற மாத்திரையைத் தயாரிக்கிறது. காய்ச்சலைக் குணப்படுத்தப்படும் இந்த மாத்திரை தற்போது வரலாறு காணாத அளவுகளில் விற்கப்படுவதோடு, நாடு முழுவதும் பெரும்பாலான மீம்களிலும் இடம்பெற்று வருகிறது. 


30 ஆண்டுகளாக மருந்து விற்பனை நிறுவனத்தின் தலைவராக இருக்கும் திலீப் சுரானா தனது குடும்பத் தொழிலான மருந்து விற்பனையில் 1983ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், டோலோ 650 மாத்திரையின் எதிர்பாராத புகழுக்குப் பிறகு, அதுகுறித்து பேட்டியளித்துள்ளார் திலீப் சுரானா. 



திலீப் சுரானா


 


`டோலோ 650’ மாத்திரை உருவானது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, அவர், `பேரசிட்டமால் 500 மில்லி மாத்திரைக்கு அதிகளவில் வாங்குபவர்கள் இருந்தார்கள். நாங்கள் பேரசிட்டமால் மாத்திரையில் சில வேறுபாடுகளைச் செய்வதாக முடிவு செய்தோம். சந்தையை நன்கு ஆராய்ந்த பிறகும், மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகும், காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் மக்களிடையே இருந்த சிரமங்களை உணர்ந்து கொண்டோம். பேரசிட்டமால் 500 மில்லி மாத்திரையால் வழங்கப்படும் காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றின் நிவாரணம் மக்களுக்குப் போதவில்லை என்பதை உணர்ந்து, அந்த காலியிடத்தை நிரப்பும் விதமாக `டோலோ 650’ மாத்திரையை 1993ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினோம். இந்த மாத்திரையின் அளவு, வடிவம் ஆகியவை எளிதில் விழுங்கும் தன்மையுடன் தயாரிக்கப்பட்டவை. இந்த வடிவத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மாத்திரை `டோலோ 650’’ எனக் கூறியுள்ளார். 



டோலோ 650 மாத்திரைகள்


 


`டோலோ 650’ மாத்திரை தற்போது வைரலாகி இருப்பது குறித்து திலீப் சுரானாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், `கடந்த சில பத்தாண்டுகளாக, 650 மில்லிகிராம்களில் பேரசிட்டமால் மாத்திரையாக மருத்துவர்களாக் பரிந்துரைக்கப்பட்டு வருவது `டோலோ 650’ மாத்திரை தான். நாங்கள் இதுவரை இந்த மாத்திரை குறித்து நேரடியாக மக்களிடம் விளம்பரம் செய்தது இல்லை. எனவே சமீபத்தில் `டோலோ 650’ வைரலானதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இதற்கான காரணங்களாக என்னால் பலவற்றைப் பட்டியலிட முடியும். கொரோனா பாதிப்பில் ஏற்படும் முதல் அறிகுறிகளாக காய்ச்சலும், உடல் வலியும் இருக்கின்றன; இவற்றிற்குச் சரியான மருந்தாக `டோலோ 650’ இருக்கிறது. தனிமைப்படுத்துதல், ஊரடங்கு ஆகிய காலங்களில் மருத்துவர்களை நோயாளிகள் நேரடியாக சந்திக்க இயலாமல் இருந்த போது, `டோலோ 650’ குறித்து வாட்ஸ் அப் முதலான தொடர்பு வலைத்தளங்களில் பரிந்துரைகள் பெருகுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் பல்வேறு குடும்பங்களை `டோலோ 650’ எட்டியுள்ளது’ எனக் கூறியுள்ளார். 


சமூக வலைத்தளங்கள் முழுவதும் `டோலோ 650’ மாத்திரை குறித்த மீம்ஸ் வைரலாகியுள்ள நிலையில், அதன் நிறுவனர் அதுகுறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.