உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். மோதிய கார்களில் ஒன்றில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை அஜய் மிஸ்ராவும், ஆஷிஷ் மிஸ்ராவும் மறுத்தனர். இருப்பினும், ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க டி.ஐ.ஜி. உபேந்திர அகர்வால் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.



விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய மந்திரி மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதற்கு அவர் ஆஜராகாததால், 2-வது தடவையாக சம்மன் அனுப்பினர். அதை ஏற்று நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் லகிம்பூர் கேரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிறப்பு விசாரணை குழு முன்பு அவர் ஆஜரானார். 12 மணி நேரமாக அவரிடம் விசாரணை நடந்தது. லகிம்பூர் சம்பவம் நடந்த போது நான் அங்கு இல்லவே இல்லை என்று கூறிய அமைச்சர் மகனின் செல்போன் சிக்னலை டிராக் செய்ததில் அவர் அங்குதான் இருந்தார் என்பது உறுதியானது. இந்நிலையில், இரவு 11 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். அங்கேயே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நள்ளிரவில் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட சிறையில் ஆஷிஷ் மிஸ்ரா அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசுத்தரப்பு வக்கீல் எஸ்.பி.யாதவ் கூறினார்.



இந்த நிலையில் லக்னோவில் நடைபெற்ற பாஜக சிறுபான்மையினர் பிரிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், தங்கள் நடத்தையின் மூலம் தொண்டர்கள் மக்களிடம் நம்பிக்கை பெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். நம்மை பார்த்தால் மக்கள் முகத்தை திருப்பிக் கொண்டு போகும்படி நடந்துக் கொள்ள கூடாது என்ற அவர், நடத்தையை பார்த்து தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கவோ அல்லது யாரையும் காரை ஏற்றி நசுக்கவோ நாம் அரசியலுக்கு வரவில்லை என்று லக்கிம்பூர் சம்பவத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசினார்.உத்தரப் பிரதேச பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங் இந்த பேச்சு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.