ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில், நேற்று ( ஜூலை 16, திங்கட்கிழமை ) இரவு, ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 4 ஜவான்கள் மற்றும் ஒரு கேப்டன் ரேங்க் அதிகாரி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில், பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அங்கு நிலவும் நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
நேற்று இரவு 9 மணியளவில், ஜம்மு காஷ்மீரின் வடக்கு தோடாவில் உள்ள தேசா வனப் பகுதியில் உள்ள தாரி கோடே உரார்பாகியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்தது. அதில், 5 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் பாதுகாப்பு வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த வனப்பகுதியை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள்:
இதுகுறித்து மேஜர் ஜெனரல் (ஓய்வு) பிகே சேகல் கூறுகையில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, 60 உயர் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவினர். "அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர், இருப்பினும், இன்னும், அவர்களில் பலர் இங்கு உள்ளனர். ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கண்காணிப்பு மூலம் அவர்களை அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்கள் அதிக பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சமீபத்திய ஆயுதங்கள் மற்றும் மைக்ரோ-செயற்கைக்கோள் தொடர்புத் தொகுப்புகளைக் கொண்டுள்ளதால், கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது என சேகல் கூறினார்.
சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அவை குறித்து காண்போம்.
ஜூலை 8: லோஹாய் பிளாக்கில் உள்ள கதுவாவின் பேட்நோட் கிராமத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜூலை 7: ரஜோரியில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
ஜூன் 26: தோடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜூன் 11-12: தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் மூன்று தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களில் சத்திரகல்லாவில் ஒரு ஜவான் கொல்லப்பட்டதுடன் ஆறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர். காண்டோ பகுதியில் உள்ள கோட்டா உச்சியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.
ஜூன் 9: வைஷ்ணோ தேவி யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ரியாசி பேருந்து தாக்குதலில் குறைந்தது ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ராகுல் காந்தி விமர்சனம்:
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது, பாஜகவின் தவறான கொள்கைகளால் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், தொடர்ச்சியான தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீரின் மோசமான நிலையை வெளிப்படுத்துவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.