ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான வளர்ந்து வரும் மையமாக இந்தியாவை காண்பிக்கும் வகையிலான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


ஏரோ இந்தியா:


கர்நாடக மாநிலம பெங்களூருவில் இந்தியாவின் விமான கண்காட்சியான 'ஏரோ இந்தியா'வை பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை தொடங்கி வைத்தார். ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உபகரணங்கள்  ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான மையமாக, இந்திய நாட்டை இந்த கண்காட்சி வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.


'100 கோடி வாய்ப்புகளுக்கான ஓடுபாதை' என்ற கருப்பொருளில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி:


இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா புதிய உயரங்களை தொட்டு, அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதற்கு ஏரோ இந்தியா நிகழ்ச்சியே உதாரணமாகும் என தெரிவித்தார்.






இந்நிகழ்ச்சி மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


ஏரோ இந்தியா கண்காட்சி மூலம் சுமார் 75,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதில், சுமார் 250 வணிக-வணிக ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


ஏரோ இந்தியாவின் கண்காட்சியானது, வான்வெளி மற்றும் பாதுகாப்பு திறன்களில் நாட்டின் வளர்ச்சியில் தற்சார்பு இந்தியாவின்  வளர்ச்சியை காண்பிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பங்கேற்பு:


கண்காட்சியில் ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஆர்மி ஏவியேஷன், எச்சி ரோபோடிக்ஸ், எஸ்ஏஏபி, சஃப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, பாரத் போர்ஜ் லிமிடெட், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்) மற்றும் பி.இ.எம்.எல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.


ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் 32 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், 29 நாடுகளின் விமானப்படை தளபதிகள் மற்றும் 73 சர்வதேச மற்றும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.