இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி உண்டு. சில இடங்களில் குறிப்பிட்ட விதிகள் இருக்கும். அதனை பின்பற்றி செல்லலாம். ஆனால் இந்தியாவில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லாத இடங்களும் உண்டு. இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். அவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.


 


உனோ இண்டர்நேஷனல் ஹோட்டல், பெங்களூர் கர்நாடகா


பெங்களூரி சாந்தி நகரில் உள்ளது இந்த ஹோட்டல். ஜப்பானியர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி. இந்த ஹோட்டலின் மாடியில் ஜப்பானிய உணவகம் ஒன்றும் கூட செயல்படுகிறது. ஆனால் அங்கு நுழைய நீங்கள் ஜப்பானியராக மட்டுமே இருக்க வேண்டும். வேறு எந்த நாட்டவருக்கும் அனுமதி இல்லை.




ஃப்ரீ கசோல் கேஃப், கசோல், ஹிமாச்சல்.


ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்த காபி உணவகம். இங்கு கிடைக்கும் பெரும்பாலான உணவு வகைகள் இஸ்ரேலிய நாட்டு உணவுகளாக இருக்கும். குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்பு வரை அனைவருக்குமே இங்கு அனுமதி இருந்தது. 2015ம் ஆண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளோடு இந்தியர் ஒருவர் வந்த போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. நிர்வாகத்தை பொருத்தவரை இந்திய ஆண்கள் வெளிநாட்டு பெண்களோடு மோசமாக நடக்க முயல்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.




ப்ராட்லாண்ட் லாட்ஜ், சென்னை.


சென்னையில் உள்ள இந்த லாட்ஜில் இந்தியர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்களது கொள்கையாகவே அதனை வைத்துள்ளார்கள். வாயிலில் ”இந்தியர்கள் அனுமதி இல்லை” என்ற வாசகத்தை காணலாம். வெளிநாட்டு பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும். ஒருமுறை இந்தியர் ஒருவர் ஆன்லைனில் பதிவு செய்து சென்ற போது , வரவேற்பறையிலேயே திருப்பி அனுப்பினார்கள் என்பதால் பல ஆண்டுகள் பேசு பொருளானது.




வெளிநாட்டவர்கள் மட்டும் கடற்கரை, கோவா


கோவாவில் இந்தியர்கள் செல்ல அனுமதி இல்லாத பல கடற்கரைகள் உண்டு. மிக வெளிப்படையாகவே அறிவிப்புகள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் தங்குவதற்கும் சுற்றிவர செய்யும் வகையிலும் இது போன்ற முடிவுகள் எடுக்கப்படுவதாக கடற்கரை பகுதி உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் கடற்கரைக்கு இந்தியர்கள் வந்தால் வெளிநாட்டவர்களுக்கு தேவையற்ற சிக்கல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.




நூர்புலிங்கா கஃபே, தரம்சலா


இந்த உணவகமும் கூட ஜப்பானியகர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள உணவகம். இங்கு இந்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களை போன்று இருந்தாலே அனுமதி இல்லை என்கின்றனர் உரிமையாளர்கள். ஜப்பானிய சிறப்பு உணவுகள், பாரம்பரிய நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும் இடமாகவும் இது உள்ளது.




இவை மட்டுமல்ல, இன்னும் நிறைய இடங்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக சுற்றுலாப் பயனிகள் அதிகம் வரும் இடங்களில் அவர்களின் பயணத்தை சிக்கலின்றி நடத்த இது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியர்கள் வந்தால் வெளிநாட்டு பயணிகளை வேறு மாதிரி பார்க்கிறார்கள், சிக்கலை உண்டாக்குகிறார்கள் என வாதம் வைக்கப்படுகிறது. அது பலரது கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறது.