இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட   புதிய தொழில்நுட்ப  தொழில்நுட்ப விதிகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டதால் இந்த மாத தொடக்கத்தில் ட்விட்டரின் இண்டர்மீடியேட்டர் ஸ்டேட்டஸ் அதாவது  சட்ட பாதுகாப்பு  ரத்து செய்யப்பட்டது. இதன்  மூலம்  ட்விட்டர் ட்விட்டரில் எந்த ஒரு பயனாளர் இடும் கருத்துகளுக்கும் ட்விட்டர் நிறுவனமே நேரடியாக பொறுப்பேற்க  வேண்டும். அதன் அடிப்படையில் தற்பொழுது ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.



 


ட்விட்டரில் குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான இணைப்புகளும் பரவி வருவதாக  கூறி தற்போது ட்விட்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் (National Commission For Protection of Child Rights)  டெல்லி சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், போக்சோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ்  Twitter Inc & Twitter Communication India Pvt Ltd மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டருக்கு எதிரான முதல் போக்ஸோ வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் தலைவர், குழந்தைகள் குறித்த பாதுகாப்பினை ட்விட்டர் மீறியதற்கும், தவறான கருத்துகளை பரப்புவது தொடர்பாகவும் ட்விட்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்படுள்ளது. இது குறித்து முதல் தகவல் அறிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டர் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை வழங்குவதில்லை என்ற அடிப்படையில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளோம் “ என தெரிவித்தார்




கடந்த சில வாரங்களாகவே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்குமான  மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. புதிய டிஜிட்டல் கொள்கையினை ஏற்காமல் ”அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது “ என ட்விட்டர் அடம்பிடித்த விவகாரம் மத்திய அரசை எரிச்சலடைய செய்தது. தொடர்ந்து மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தையும் பொருட்படுத்தாமல்  அலட்சியம் செய்த ட்விட்டரின் சட்ட பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டது.


அதனை தொடர்ந்து ட்விட்டரின் அமெரிக்க டிஜிட்டல் விதிமுறையை மீறியதாக கூறி தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தற்காலிகமாக முடக்கியது ட்விட்டர்  இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ரவிசங்கர் பிரசாத், “கருத்து சுதந்திரத்தை முன்வைக்கும் ட்விட்டர் நிறுவனமே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, இது அந்த நிறுவனத்தின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இதனால் அரசு ஐடி விதியின் நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது  “ என தெரிவித்தார்.


இதனையடுத்து ட்விட்டரால் நியமிக்கப்பட்ட இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியும் பதவியை ராஜினாமா செய்தார். தற்பொழுது அவரது பொறுப்பில் அமெரிக்கர் ஒருவரை பணியமர்த்தியுள்ளது ட்விட்டர். இதேபோல காஷ்மீர் மற்று லடாக் பகுதிகளை வேறு நாடுகளாக காட்டி  கண்டனத்திற்கு ஆளான நிலையில் தற்போது குழந்தைகள் குறித்த தவறான புகைப்படங்கள் பகிரப்படுவதாக கூறி போக்சோ சட்டத்தை சுமந்து நிற்கிறது ட்விட்டர்.