இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து இருக்கிறார்.. கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்சா தான். கடந்த ஆண்டு செப்டம்பரில் இரட்டையர் பிரிவில் 43வது பட்டம் வென்றார். பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தரவுகளின்படி, சானியா மிர்சா வெற்றிப் பெற்ற மொத்த பரிசுத் தொகை $7,030,997 (சுமார் ₹53 கோடி) ஆகும்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில், மகளிர் இரட்டையர் பிரிவில் நாடியாவுடன் இணைந்து ஆடிய சானியா மிர்சா தோல்வி அடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்ததாக ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட உள்ளார்.



இந்நிலையில், மகளிர் இரட்டையர் பிரிவில் அடைந்த தோல்விக்கு பிறகு, தனது ஓய்வு முடிவை அறிவித்தார் சானியா மிர்சா. இது குறித்து பேசிய சானியா மிர்சா, “இதுவே டென்னிஸில் எனது கடைசி பருவம். என்னால் இப்போது காயமடைந்தால் உடனடியாக மீண்டு வர முடியவில்லை. காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸ் பெற அதிக காலம் எடுக்கிறது. 3 வயது மகனுடன் பயணம் செய்வதால், அவனுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இந்த போட்டியில் ஆடும்போது கூட எனது கால் வலித்தது. அது எனது தோல்விக்கான காரணம் இல்லை. ஆனால் அதே வேளையில் என்னால் இப்போதெல்லாம் காயத்திலிருந்து மீள அதிக நாட்கள் எடுக்கிறது. எனவே இந்த ஆண்டுடன் ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன்” என்றார் சானியா மிர்சா.


டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவில் மகளிரும் சாதிக்க முடியும் என்பதற்கு சானியா மிர்சா ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். மகளிர் இரட்டையர் பிரிவில் அசத்தல் வீராங்கனையாக வலம் வந்த சானியா மிர்சா 2016ம் ஆண்டு மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு தொடரை வென்றார். ஓஸ்ட்ரவா ஓபன் தொடரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சூவாய்ஷாங்குடன் இணைந்து தனது 43வது டிராபியை வென்றிருந்தார்.



மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில் அதிகபட்சமாக 27வது இடம் வரை அடைந்து சாதனை படைத்துள்ளார். சானியா மிர்சாவின் இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சானியா மிர்சா இதுவரை 3 மகளிர் கிராண்ட்ஸ்லாம் தொடரையும், 3 கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார். 


கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுஹைப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சாவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் பயணம் செய்வதும் தனக்கு கடினமாக இருப்பதாக சானியா மிர்சா கூறினார்.