கொரோனா பேரிழப்பில் இருந்து நம்மையும் நம் சுற்றத்தையும் காக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் https://www.cowin.gov.in/home  என்ற இணையதளத்திலோ அல்லது  ஆரோக்கிய சேது ( Arogya Setu app) செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து தடுப்பூசியை பெறலாம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள சுகாதர மையங்களிலோ அல்லது மருத்துவமனைகளிலோ தடுப்பூசியை நேரடியாக சென்று பெறலாம். தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு முன்பாகவும், அதற்கு பின்னரும் சில வழிமுறைகளை மக்கள் பின்பற்றவேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்

தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன்னர் செய்ய வேண்டியவை :

பணிக்கு செல்பவராக இருந்தாலோ அல்லது வீட்டில் இருந்து பணிபுரிபவராக இருந்தாலோ நீங்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக‌ முன்பதிவு செய்துள்ளதை அலுவலகங்களுக்கு தெரியப்படுத்திவிடுங்கள், ஏனெனில் எந்த நேரத்திலும் உங்களுக்கு தடுப்பூசி கிடைக்கலாம் எனவே அது உங்களின் வேலையில் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும். கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் தடுப்பூசி  செலுத்திக்கொள்வதை தவிர்க்கவேண்டும், 14 நாட்கள் கழிந்த பின்னரே தடுப்பூசி எடுக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைகளை பெறுவதே சிறந்தது.


தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு  முன்னதாக வெறும் வயிற்றோடு இருக்கக்கூடாது. அதிக சத்துள்ள காய்கறிகள் அடங்கிய  உணவுகளை சாப்பிடலாம். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவும். அதிகப்படியான நீரை அருந்த வேண்டும். இது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும்.
இரவில் சரியான நேரத்திற்கு தூங்கவேண்டும், அமைதியான உறக்கம் உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக மாத்திரைகள் அல்லது மருந்துகள் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். தினமும் வலி நிவாரணி அல்லது ஆஸ்ப்ரின் போன்ற மருந்துகளை எடுப்பவராக இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்.

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்

தடுப்பூசி எடுத்துக்கொள்ள செல்லும் பொழுது முழுக்கை ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம். அரைக்கையுடன் கூடிய ஆடைகள் தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக இருக்கும். தடுப்பூசி மையங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்வது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். மேலும் எந்த வகை தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை நினவில் வைத்துக்கொள்ளுங்கள் அது இரண்டாவது டோஸை செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.




தடுப்பூசி செலுத்திய பின்னர் செய்ய வேண்டிய வழிமுறைகள்:

தடுப்பூசி செலுத்தியபிறகு 20 நிமிடங்கள் மருத்துவமனையிலேயெ காத்திருங்கள். பக்க விளைவுகள்  இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுங்கள்.

தடுப்பூசி செலுத்திய உடனே மயக்கம் , வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.

புகைபிடிப்பது, மது அருந்துவதை அடுத்த சில மாதங்களுக்கு தவிர்க்கவேண்டும். மேலும் அதிக நீர் அருந்துவது ஆரோக்கியமான உடல்நலத்திற்கு வழிவகுக்கும்

காய்ச்சல், சளி, உடல் வலி, ஊசி செலுத்திய இடத்தில் வலி போன்ற சிறு பக்கவிளைவுகள் ஏற்படும் அதற்கு தயாராக வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பாராசிட்டம்மால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, பக்கவிளைவுகளில் இருந்து காக்கும். பக்க விளைவுகள் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.


ஊசி செலுத்திய இடத்தில் ஏற்படும் வலியை ஈர துணிக்கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

அடுத்த டோஸ் செலுத்திக்கொள்வதற்கான நேரத்தை மறக்காமல் குறித்துக்கொள்ளுங்கள். 15 நாட்களுக்கு பிறகே தடுப்பூசி வேலைசெய்யும் என்பதால் கொரோனா தொற்று ஏற்படாமல் உங்களை பாதுகாத்துக்கொள்வது அவசியம்.