டெல்லியில், மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை, இனி, திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள், ஆண்கள் என்று பாதுகாப்புக்கும் வசதிக்கும் ஏற்ப போது கழிவறைகள் அமைத்திருக்கும் நம் சமுதாயம் இங்கு திருநங்கைகள் எனப்படும் ஒரு பாலினம் உண்டு என்பதை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தது. வெளியில் இருந்து அரசியல் பார்வையில் பார்க்கும்போது இதன் முக்கியத்துவம் புரிந்தாலும், ஒரு தனிப்பட்ட திருநங்கை பொதுகழிப்பிடத்தில் எந்த பிரிவை பயன்படுத்துவார் என்று யோசிக்கும்போது தான் நாம் செய்துள்ள அநீதி நமக்கு புரியும்.
இந்த அநீதியை களைய முன்வந்துள்ளது டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம். தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு என தனி கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது வரை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொண்டிருந்த தனிக் கழிவறை வசதியை இப்போது திருநங்கைகளும் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதுமூன்றாம் பாலினத்தவர்களின் பாதுகாப்பிற்கும், சுகாதாரத்திற்கும் எந்த அளவு உதவுகிறதோ அதே அளவு அவர்களை மனதளவில் பலப்படுத்தும். சமூகத்தில் மக்கள் தனியாக பார்ப்பதை நிறுத்துவதற்கு முதல் படிக்கட்டாக இருக்கும். இந்த மாற்றம் கூடிய விரைவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நிகழவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, "பாதுகாப்பான இடம் அளித்து திருநங்கைகளுக்கு எதிரான பாலின பாகுபாட்டை களையும் முயற்சியில், மாற்றுத்திறனாளிகளின் கழிவறை வசதியை திருநங்கைகள் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனிக் கழிவறைகளை தவிர்த்து, தங்களின் பாலினத்திற்கு ஏற்ற கழிவறைகளை பயன்படுத்தவும் திருநங்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மற்ற பயணிகளுக்கான கழிவறைகளை தவிர்த்து 347 மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள் உள்ளன. இது அவர்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. திருநங்கைகளுக்கு உதவும் வகையில் இக்கழிவறைகளை தற்போது அவர்கள் பயன்படுத்தலாம் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் திருநங்கைகள் என்று பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் போல் திருநங்கைகளின் சின்னம் பொறிக்கப்பட்ட பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
15 லட்சம் பேரை கொன்ற ஸ்டாலின் படத்தை, கம்யூனிஸ்டுகள் வழிபடுவதா? - காங்கிரஸ் எம்.எல்.ஏ