மத்திய பிரதேசத்தில் திருடன் என நினைத்து லாரியில் கட்டி இழுத்து செல்லப்பட்ட பழங்குடியினர் உயிரிழந்த சம்பவத்திற்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் தொடர்ந்து பதிவிடப்படுகிறது
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பழங்குடியினரைச் சேர்ந்த 45 வயதான கன்ஹியா பில் என்பவரை திருடன் என நினைத்த ஒரு கும்பல், அவரை கொடூரமாக தாக்கி, பின்னர் ஒரு லாரியின் பின்னால் அவரை இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதும், பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் நீமுச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால், அங்கு அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்தியப் பிரதேச காவல்துறையினர் கூறினர். கன்ஹியா பில் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் ஒரு திருடன் என்று நினைத்த ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார் என்றும் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த நீமுச்சின் கூடுதல் எஸ்.பி., சுந்தர் சிங் கணேஷ், கன்ஹியா பில் என்ற நபரை அடித்து, அவரது கால்களை பிக்-அப் லாரியில் கயிற்றால் கட்டி, பின்னர் அவரை நீமுச்சில் இழுத்துச் சென்றதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர், காலில் கயிற்றைக் கட்டிக்கொண்டு, ஒரு லாரி மூலம் இழுத்துச் செல்லப்படுவதைக் காணலாம், பாதிக்கப்பட்டவர் அவரை விடுவிக்குமாறு கெஞ்சினாலும் அவர்கள் விடவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தனது டுவிட்டர் பக்கத்தில், மத்தியப் பிரதேசத்தில் தற்போது வன்முறை, மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு சமூகவலைதளங்கள் கண்டனக் குரல்கள் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன.