நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.


அதில் கலந்து கொண்டு பேசிய பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், "மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரம்பலூர், துறையூர் வழியாக அரியலூர்-நாமக்கல் ரயில்வே பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.


பெரம்பலுர் வழியாக ரயில்பாதை அமைப்பது 50 ஆண்டுகால கனவு என்றும் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வருமா?" என கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், "இந்த திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.


அதேபோல, ஆன்லைன் தடை சட்டம் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின் வைஷ்ணவ், "ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்கப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்" என உறுதி அளித்துள்ளார்.


"இது தொடர்பாக 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தானாக சட்டம் இயற்றியுள்ளது. 17 மாநிலங்கள் பொது சூதாட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பிரிவுகளை அதில் அறிமுகம் செய்துள்ளது. 


ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நம்மிடையே ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். மத்தியில் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்" என்றும் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி ஆகியோர் நேற்று கேள்வி எழுப்பினர்.


இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு புகழாரம் சூட்டினார். "அவரது தொலைநோக்கு உரையில், எங்களுக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் குடியரசு தலைவர் வழிகாட்டினார். குடியரசின் தலைவராக அவரது இருப்பு வரலாற்று சிறப்புமிக்கது. நாட்டின் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஊக்கமளிக்கிறது.


பழங்குடியின சமூகத்தின் பெருமையை குடியரசு தலைவர் உயர்த்தியுள்ளார். இன்று, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பழங்குடி சமூகத்தில் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக இந்த தேசமும் நாடாளுமன்றமும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது" என்றார்.