சமீப காலமாகவே, ஆபாசமான, அருவருக்கத்தக்க கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, பெண்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பூட்டும் பதிவுகள் சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற மோசமான பதிவுகள் பதிவிடப்படுவதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


ஊடகங்களில் எந்த வித கட்டுப்பாடும் இன்றி வெறுப்பு பேச்சு பேசப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், "நம் நாடு எதை நோக்கி செல்கிறது. இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கும்போது, அரசு ஏன் அமைதி காக்கிறது. வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த போதுமான பொறிமுறை தேவை" என கருத்து தெரிவித்திருந்தது.


இந்நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் ஆபாசமான, அருவருக்கத்தக்க கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்த திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு, இதை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 






இதை தொடர்ந்து, திமுக எம்பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டு பேசினார்.


திறந்த, பாதுகாப்பான, நம்பகத்தன்மைவாய்ந்த, பொறுப்பான இணையத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்ததாக கூறினார்.


"இணையம் விரிவடைந்து வருவதாலும் இணையத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் இணையத்தில் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கங்களுக்கு இந்தியர்கள் உள்ளாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.


இந்த விவகாரத்தில் தகவல் தொழில்நுட்ப விதிகளின் மூலம் சமூக வலைதள நிறுவனங்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளன" என மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.


தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டலை மேற்கோள் காட்டி பேசிய, "திறன் மேம்பாட்டிற்காக மாநிலங்களுக்கு நிதி உதவி, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என மத்திய அமைச்சரும் தெரிவித்துள்ளார்.


ஆனால், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் மூலம் சமூக வலைதள நிறுவனங்களை பொறுப்பாக்குவதற்கு அந்நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.