நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடந்தது. இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்பி செந்தில்குமார், "யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக்க எதிர்பார்ப்பது தான் வழக்கம்.


சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி:


ஆனால், முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. பாஜக பல மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது. எப்போது அவர்களால் வெல்லமுடியவில்லையோ அந்த மாநிலத்தை அவர்கள் யூனியன் பிரதேசமாக்கிவிடுகிறார்கள். அங்கே ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துகிறார்கள். எங்கே அவர்களது வெற்றி உறுதி செய்யப்படுகிறதோ அங்கே அவர்கள் அதை செய்வதில்லை.


எனவே, இந்த நாட்டின் மக்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். பாஜக வெற்றிபெறுவதெல்லாம் நாங்கள் மாட்டு மூத்திர மாநிலங்கள் என்று குறிப்பிடும் ஹிந்தி மாநிலங்களின் இதயப்பகுதியில்தான். பாஜகவால் தென்னிந்திய மாநிலங்களில் வெற்றிபெற முடியாது. பாஜகவால் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியாது. 


தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அவர்களுக்கு கிடைத்த முடிவுகளைப் பாருங்கள். நாங்கள் அங்கே மிகவும் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். 


கொந்தளிக்கும் வட மாநிலங்கள்:


எம்பி செந்தில்குமாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்பியின் பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கண்டித்துள்ளனர். செந்தில்குமாரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், "எம்பி செந்தில்குமார் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் மிகவும் எதிர்பாராத வார்த்தைகள். அவை நாகரிகத்துக்கு உகந்தவை அல்ல. செந்தில்குமார் அவரது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டு, தான் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


செந்தில்குமார் எம்பியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றொரு காங்கிரஸ் எம்பியான ராஜிவ் சுக்லா, "திமுகவின் அரசியல் வேறுவிதமானது. காங்கிரஸ் அவர்களது அரசியலுடன் உடன்படவில்லை. காங்கிரஸ் பசுமாதாவைப் போன்றே சனாதன தர்மத்தையும் நம்புகிறது. அனைத்து மதத்தினரும் இணைந்து முன்னேற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.


செந்தில்குமாரின் பேச்சை மதிமுக தலைவர் வைகோ வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "செந்தில்குமார்  பேச்சுடன் உடன்படுகிறேன். அவர் சொன்னது சரிதான்" என்று கூறியுள்ளார்.


ஏற்கனவே சனாதனம் பற்றி உதயநிதி பேசியது வடமாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. நடந்த முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு, சனாதனம் குறித்து உதயநிதி பேசிய பேச்சே காரணம் என சிலர் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், வடஇந்திய மாநிலங்களை பசு மூத்திர மாநிலங்கள் என திமுக எம்பி குறிப்பிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


திமுக எம்.பி டி.என்.வி.செந்தில்குமார் தனது 'கௌமுத்ரா' கருத்து குறித்து பேசியபோது, "சபைக்குள் நான் சில அறிக்கைகளை வெளியிட்டேன். அப்போது உள்துறை அமைச்சரும், பாஜக உறுப்பினர்களும் அங்கு இருந்தனர். இதை நான் முன்பு எனது நாடாளுமன்ற உரைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். சர்ச்சைக்குரிய அறிக்கை அல்ல. நான் பேசிய பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால், அடுத்த முறை அதை பயன்படுத்துவதை தவிர்க்க முயற்சிப்பேன். அவர்களின் ஓட்டுகளை பெறுவதில், பா.ஜ.க பலமாக உள்ளதை, வேறு வார்த்தைகளில் குறிப்பிட முயற்சிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.