மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.  


சத்தீஸ்கர்:


2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.


ஆனால், இந்த முறை ஆட்சியை தவறவிட்டுள்ளது காங்கிரஸ். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த தேர்தலில் 54 இடங்களில் வென்று 5 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. பெரும் வெற்றியை பதிவு செய்திருந்தாலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதை பாஜக தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை. அந்த வகையில், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் பலரின் பெயர் அடிபடுகிறது. 


அடுத்த முதலமைச்சர் யார்?


அதில் முக்கியமானவராக கருதப்படுபவர் டாக்டர் ராமன் சிங். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவராக உள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரை, சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக 15 ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார். 


இவரின் ஆட்சி காலத்தில்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோக முறை பலப்படுத்தப்பட்டு, மக்கள் அனைவருக்கும் அரிசி சென்றடைந்தது. இதனால், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க முதலமைச்சர்களில் ஒருவராக உருவெடுத்தார். இருப்பினும், ஆட்சிக்கு எதிரான மனநிலை காரணமாக கடந்த தேர்தலில் ஆட்சியை இழக்க நேரிட்டது.


பாஜகவின் வெற்றியை தொடர்ந்து, முதலமைச்சராக வர விருப்பம் இருக்கிறதா என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராமன் சிங், "கட்சி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், நான் மறுக்க மாட்டேன். ஆனால், எனக்குதான் தர வேண்டும் என கேட்கவில்லை" என்றார்.


பழங்குடி பெண்தான் அடுத்த முதலமைச்சர்?


முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் அதிகம் அடிபடும் பெயர் அருண் சாவோ. மாநில பாஜக தலைவரான அருண் சாவோ, பிலாஸ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். பாஜகவின் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். சத்தீஸ்கரில் உள்ள 51 ரிசர்வ் செய்யப்படாத தொகுதிகளில் செல்வாக்கு படைத்தவராக உள்ளார். 


சத்தீஸ்கர் முதலமைச்சரான பூபேஷ் பாகேலின் உறவினர் விஜய் பாகேல். படானைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கடந்த 2008இல் பாஜகவில் இணைந்தவர். இந்த தேர்தலில் பூபேஷ் பாகேலுக்கு எதிராக படான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய மற்றொருவர் ரேணுகா சிங். மத்திய பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சராக உள்ளார். பழங்குடியின பெண் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க விரும்பினால், இவரே சிறந்த தேர்வாக இருப்பார். பாரத்பூர்-சோன்ஹாட் தொகுதியில் காங்கிரஸின் குலாப் கமோரை எதிர்த்து போட்டியிட்டு 5,433 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


பழங்குடி சமூகத்தை சேர்ந்த கேதார் காஷ்யபும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2003 முதல் 2018ஆம் ஆண்டு வரை இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர். பாஜகவின் பழங்குடி தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ சந்தன் காஷ்யப்பை எதிர்த்துப் போட்டியிட்ட கேதார் காஷ்யப், நாராயண்பூர் தொகுதியில் 17,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.