நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா ஆவேசமாக பேசினார். மக்களவையில் அவர் பேசியதாவது,



குஜராத் மாடல்? திராவிட மாடல்?


“என்ன குஜராத் மாடல்? அதனால் என்ன பயன். எங்கள் முதலமைச்சர் திராவிட மாடல் பற்றி பிரதமர் முன்னிலையிலேயே பேசினார். எந்த மாடல் உங்களுக்கு வேண்டும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்ததையே உதாரணமாக கூறுகிறேன். நடப்பாண்டில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் குஜராத்தில் 22 சதவீதமும், உத்தரபிரதேசம் 31 சதவீதம் மக்களும் உள்ளனர்.


நான் அனைத்து மாநிலங்களின் பட்டிலையும் வாசிக்கவில்லை. இந்த பட்டியலில் தமிழ்நாடு எங்கிருக்கிறது தெரியுமா? தமிழ்நாட்டில் 14 சதவீதம் பேரும், கேரளாவில் 10 சதவீதம் பேரும் உள்ளனர். இதுதான் திராவிட மாடல். ஒரு முக்கியமான தகவலுடன் முடித்துக் கொள்கிறேன். இன்றைய கேள்வி நேரத்தில் என்ன நடந்தது? அமைச்சர் பதில் அளித்துள்ளார். கடந்தாண்டு சிறுபான்மையின மக்களுக்கு கடந்தாண்டு 1810 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பாண்டில் மிகவும் குறைந்து 610 கோடியாக குறைந்துள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? இது துரதிஷ்டவசமானது.  இது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது.


கேசவானந்த பாரதி வழக்கு:


கேசவானந்த பாரதி வழக்கில் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கு 68 நாட்கள் விசாரித்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என்று தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் பல்திவாலா அப்போதைய பிரதமர் இந்திராகாந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் அரசியலமைப்பின் அடிப்படைதான் சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு கேடயம் ஆகும். அவர்களின் பிறப்புரிமை மாற்றப்படக்கூடும் என்ற அச்சம் அவங்களுக்கு இருக்கிறது.


நாம் இன்று அரசியலமைப்பின் அடிப்படையை பாதுகாத்து வைத்துள்ளோம். எதிர்காலத்தில் உங்களைப் பின்தொடர்பவர்கள் இதேபோன்று மதவெறி இல்லாத கண்ணோட்டத்துடன் எத்தனை பேர் இருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பி எழுதியிருந்தார்.


கையெடுத்து கும்பிட்றேன்:


இன்று சிறுபான்மையினர் நலனுக்கான நிதி மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. நான் கையெடுத்துக் கும்பிடுகிறேன். நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடி இங்கு இல்லை. இருந்தாலும் நான் வேண்டிக் கேட்டு்கொள்கிறேன். அரசியலமைப்பை தயவு செய்து காப்பாற்றுங்கள். அரசியலமைப்பின் முதல் வரி நாம் தான் இந்தியர்கள் என்று சொல்கிறது.” இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் படிக்க: UKG Child : யுகேஜி மாணவியை ஃபெயிலாக்கிய பெங்களூரு பள்ளி: தெளிவு கோரி உத்தரவிட்ட மாநில அரசு


மேலும் படிக்க:  Avalanche warning: ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை: பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்