சர்வதேச மல்யுத்த போட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம், மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்யுத்த வீரர்களுக்கு கவியும் ஆதரவு:
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதி கிடைக்கும் வரை, போலீஸ் நிர்வாகம் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் போராட்டம் நடத்துவோம் என கூறி, டெல்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
"நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம்"
இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு திமுக தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது. மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீரர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என்றும் ஸ்டாலின் குறிப்பட்டுள்ளார். "பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி சுயமரியாதையை காப்பாற்ற போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது" என ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீரர்களை திமுக எம்.பி. அப்துல்லா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை வெல்லும்போது நாம் அனைவரும் ட்வீட் செய்து, பெருமைப்படுகிறோம். ஆனால் இன்று அவர்கள் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள், நியாயம் கிடைக்கவில்லை.
பிரதமர் மல்யுத்த வீரர்களைப் பற்றி கவலைப்படுகிறார் என்றால், அவர்களை அவர் ஏன்? சந்திக்கவில்லை. ஏன் பிரிஜ் பூஷன் சிங்கை அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லது சாராதவர்கள் யாராக இருந்தாலும் நாம் நாட்டை நேசிப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இங்கு வந்து மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என்றார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷன் சிங், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க கடுமையாக போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். உதவியற்றதாக உணரும் அந்த நாளில் மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் என்றும் உணர்ச்சி பொங்க வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.