கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்பதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இதையடுத்து பெரும்பாண்மையான நீதிபதிகள், இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என தீர்ப்பு வழங்கியதால், 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
திமுக வழக்கறிஞர் வில்சன் கருத்து:
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், திமுக எம்.பி-யும் வழக்கறிஞருமான வில்சன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நான் எடுத்த வைத்த வாதம் என்னவென்றால்,
- ஒடுக்கப்பட்ட கீழ்தட்டு மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் இட ஒதுக்கீடு. இது வறுமை ஒழிப்புக்கான திட்டம் இல்லை. பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து கொடுக்க முடியாது, ஏனென்றால் இந்திரா-சஹானி வழக்கில் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.
- மேலும், இதர எஸ்.டி, எஸ்.சி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினரிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உள்ளனர். இந்நிலையில் ஏன் முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினோம்.
- இந்தியாவில் இருக்கிற 33 சதவீதத்தினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. ஆகையால், மூன்றில் ஒரு பங்கு பிரிவினருக்கு இந்த இட ஒதுக்கீடு சென்று விடுகிறது. இட ஒதுக்கீடு நோக்கமே, பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு, கல்வியும் அரசு வேலையும் கிடைக்காமல் தடுக்கப்பட்டதற்கு, நிவர்த்தி செய்யும் வகையில் கொடுக்கப்பட்டதே இட ஒதுக்கீடு திட்டம். இதன் மூலம் இட ஒதுக்கீடு திட்டமே பாதிக்கப்படும் என வாதம் வைத்தோம்.
- மேலும் வருமான அளவுகோலை வரையறை செய்ய அமைக்கப்பட்ட சின்ஹோ கமிஷனின் அடிப்படையாக வைத்து, அதிகமாக 10 சதவீதம் வழங்குவது தவறு என்ற வாதத்தை எடுத்து வைத்தோம். இது சமத்துவத்துவத்துக்கு எதிரானது என்ற வாதத்தையும் எடுத்து வைத்தோம்.
- 9 நீதிபதிகள் அடங்கிய இந்திரா-சகாணி வழக்கில் மட்டுமல்ல, அசோக் குமார் தாக்கூர் வழக்கிலும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது, அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனுதாக்கல் செய்வது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என வில்சன் தெரிவித்தார்.
வழக்கு:
பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று பதில் அளித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு, பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொது பிரிவினருக்காக கொண்டு வரப்பட்டது.
இந்திய அரசியலமைப்பில் 103ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசால் ஏழைகள் என குறிப்பிடப்படுபவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள். 5 ஏக்கர் விவசாய நிலமும் 1,000 சதுர அடிக்கு குறைவான வீடு அல்லது பிளாட்டை கொண்டவர்கள் எனக் கூறியது.
இத்திட்டம் கொண்டு வரப்பட்ட உடனேயே, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இந்தாண்டு செப்டம்பர் மாதம், கிட்டத்தட்ட ஆறரை மணி விசாரணைக்கு பிறகு இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று ஓய்வு பெற உள்ள யு யு லலித் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் தலைமை நீதிபதீ யு யு லலித் உள்பட 2 பேர் இட ஒதுக்கிடுக்கு எதிர்ப்பும், இதர 3 பேர் ஆதரவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.