கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தீர்க்கமான போரை அறிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


இதன் காரணமாகத் தீவிரவாதத்துக்குத் துணை போகும் நடவடிக்கைகள் முடக்கப்படும் என்றும், நாட்டில் ஊழல் பெருமளவில் குறையும் என்றும் தெரிவித்தார்.


மத்திய அரசின் இந்த முடிவு, இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. மோசமான முறையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.


கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டபோது, 15.44 லட்சம் கோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. புழக்கத்தில் இருந்த 98.96 விழுக்காடு நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக 2018ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதன் மூலம் பெருமளவு பணம் புதிய பணமாக மாற்றப்பட்டது தெரிய வந்தது.


இந்நிலையில், மக்களிடையே இருக்கும் பண புழக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி நிலவரப்படி, 30.88 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 6 ஆண்டுகளுக்கு பிறகும் பண புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதையே இது உணர்த்துகிறது.


கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி அன்று மக்களிடையே இருந்த பண புழக்கத்தை காட்டிலும் தற்போதைய பண புழக்கம் 71.84 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர் 21ஆம் தேதி நிலவரப்படி பொதுமக்களிடம் உள்ள கரன்சி 30.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






பரிவர்த்தனைக்காகவும் வர்த்தகத்திற்காகவும் சரக்கு மற்றும் சேவையை வாங்குவதற்காகவும் பயண்படுத்தப்படும் பணமே பண புழக்கமாகும். புழக்கத்தில் உள்ள பணத்தில் இருந்து வங்கிகளிடம் உள்ள பணத்தைக் கழித்த பிறகு இந்த எண்ணிக்கை கணக்கிப்பட்டுள்ளது.


பணப் பயன்பாடு, இந்திய பொருளாதாரத்தில் சீராக உயர்ந்து வருகிறது. பணம் செலுத்துவதற்கான புதிய மற்றும் மிகவும் வசதியான டிஜிட்டல் மாற்றுகள் பிரபலமாகிவிட்டன. கொரோனா தொற்றுநோய், தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்தது.