பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது.
இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்ததால் இந்த சட்டம் அமலில் உள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும், இச்சட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்பி பார்திவாலா, பேலா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு இன்று கடைசி பணி நாள் என்பதால் இன்றைய தீர்ப்பு மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், இந்த இட ஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என நீதிபதி மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
இதை, நீதிபதி பிலா திரிவேதி ஏற்று கொண்டு, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
நீதபதி எஸ்பி பார்திவாலாவும் இந்த சட்டத்தில் எந்த விதிமீறலும் இல்லை என கூறி சட்டம் செல்லும் என தெரிவித்துள்ளார்.
"நம் அரசியலமைப்பு யாரையும் விலக்கி வைக்க அனுமதிக்கவில்லை. மேலும், இந்த சட்ட திருத்தமானது சமூக நீதியின் கட்டமைப்பையும் அதன் மூலம் அடிப்படை கட்டமைப்பையும் மாற்றுகிறது. 103ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் உள்ள 2ஆவது மற்றும் 3ஆவது பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது" என நீதிபதி ரவிந்தர பட் தெரிவித்துள்ளார்.
இதை, தலைமை நீதிபதி லலித் ஏற்று கொண்டு, சட்டம் செல்லாது என தெரிவித்துள்ளார்.
வழக்கை விசாரித்த அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளில் மூவர் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி லலதி மற்றும் நீதிபதி ரவிந்தர பட் சட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 10 சதவகித இட ஒதுக்கீடு சட்டம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இது, பாஜக அரசுக்கு வெற்றியாகவே கருதப்படுகிறது.