ரெண்டே நிமிஷத்துல..


ரெண்டே நிமிஷத்துல உணவு தயார் என்ற பேமஸ் விளம்பரம் மூலம் நகரங்கள் முதல் கடைகோடி கிராமம் வரை சென்று சேர்ந்த ஒரு உணவு மேகி. நூடுல்ஸ் வகை உணவான மேகி உண்மையிலேயே எளிதில் சமைக்கக் கூடிய உணவுதான். திடீர் பசி எடுத்தாலோ, பசிக்கவில்லை எதாவது லைட்டா சாப்பிடலாம் என்ற தோன்றினாலோ அனைவரின் முதல் தேர்வு இந்த மேகிதான். அந்த மேகி எப்போதாவது என்றால் ஒகே,  எப்போதும்னா என்ன செய்வது என தன்னுடைய பிரச்னையை கோர்ட் வரை கொண்டு சென்றுள்ளார் கணவர் ஒருவர்.


இது மேகி வழக்கு..


 காலையில் மேகி, மதியம் மேகி, இரவும் மேகி என மூன்று வேளையுமே மேகி சமைத்துக்கொடுத்ததால் கோபமடைந்த கணவர் தனக்கு விவகாரத்து வேண்டுமென நீதிமன்ற படியேறியுள்ளார். இந்த வழக்கு குறித்து நீதிபதி எம்.எல்.ரகுநாத் குறிப்பிட்டு பேசியுள்ளார்.


மைசூருவில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல்.ரகுநாத், பல்லாரியில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சிறிய காரணங்களுக்காக தம்பதிகள் விவாகரத்து கோருவதாக அவர் இந்த வழக்கை குறிப்பிட்டு பேசியுள்ளார்.




இது குறித்து பேசிய நீதிபதி, '' அந்த கணவர் மேகியைக் காரணமாகக் கூறியே விவகாரத்து கேட்டார். தனது மனைவி மளிகைக் கடைக்குச் செல்வதே மேகி வாங்கத்தான் என அந்தக்கணவர் நொந்து பேசினார். அந்த தம்பதி இருவரும் மனமுவந்து அவர்களது விவாகரத்துக்கு கோரிக்கை விடுத்தனர். நாளுக்கு நாள் விவாகரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறைந்தது ஒரு வருடமாவது தம்பதி ஒன்றாக இருக்க வேண்டும்.அதன்பிறகே விவகாரத்துக்கு விண்ணப்பிக்கலாம். பொதுவாக விவகாரத்துக்கு காரணமாக இருப்பவை உளவியல் ரீதியிலான பிரச்னைகள்தான்.அதனால்தான் கவுன்சிலிங் அல்லது அறிவுரைகள் மூலம் தம்பதிகளை சேர்த்து வைக்க நீதிமன்றம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது என்றார்


தெலங்கானா சம்பவம்..


சமீபத்தில் தெலங்கானாவில் மட்டன் கறி சமைக்கவில்லை  என்பதால் போலீசாருக்கு தொடர்ந்து போன் செய்த குடிகார கணவரை காவல்துறை கைது செய்து எச்சரிக்கை விடுத்தது. குடித்துவிட்டு வந்த கணவருக்கு மட்டன் சமைக்க முடியாது என மனைவி சொல்ல, போனை கையில் எடுத்த போதை கணவர் நம்பர் 100க்கு 5 முறைக்கு மேல் போன் செய்துள்ளார். ஒருகட்டத்துக்கு மேல் கடுப்பான காவல்துறை அந்த நபரை கைது செய்தது.


அடிப்படையான விஷயம்..


மேகிக்கு விவாகரத்து, மட்டன் சமைக்காததால் போலீஸுல் புகார் போன்ற செய்திகள் குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள்,'' சாப்பாடு என்பது அடிப்படையானது. அப்படியானால் சமையல் என்பது அடிப்படையான தேவை. எனவே சாப்பிடத்தெரிந்தவர்கள் அனைவருமே சமையல் செய்ய வேண்டியது கட்டாயம். ஒரு பாலினத்து மட்டும் ஒரு வேலையை ஒதுக்கிக் கொடுப்பதும் அதனை நீதிமன்றம், காவல்துறை வரை கொண்டு செல்வதும் வெட்கக் கேடானது என கருத்து பதிவிட்டுள்ளனர்.