Tirupati Laddu Issue: திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், லட்டு செய்ய தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் நெய் அனுப்பியது தற்போது தெரிய வந்திருக்கிறது. திண்டுக்கல்லை சேர்ந்த AR Dairy என்ற நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு செய்ய நெய்யை அனுப்பி வந்திருக்கிறது. இந்நிலையில், அவர்களின் நெய் தரத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், அதனை திருப்பதி தேவஸ்தானம் ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு, ஆய்வு அறிக்கை கிடைக்கும் வரை AR Dairy யிடமிருந்து நெய் கொள்முதலை நிறுத்தியுள்ளது.


AR Dairy விளக்கம்


இந்நிலையில், AR Dairy நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நாம் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது ‘ தங்களுடைய நெய் தரமானது என்றும் தமிழக அரசு அதிகாரிகளும் தனியார் ஆய்வு நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளிலும் அது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த நிர்வாகத்தின் மேலாளர் பாண்டியன், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்களது நெய்யின் தரத்தை பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். மேலும், திருப்பதி தேவஸ்தானம் தங்கள் நெய் தரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தற்காலிகமாக நெய் கொள்முதலை நிறுத்தியுள்ளனர் என்றும் எங்கள் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தது குறித்து எங்களுக்கு எந்த தகவலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.