திருப்பதி லட்டுக்கு அறிமுகம் தேவை இல்லை. அந்த அளவுக்கு இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பிரபலமான ஒரு கோவில் பிரசாதமாக அறியப்பட்டது. தினமும் குறைந்தபட்சம் 3 லட்சம் லட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல லட்டு விற்பனையால், ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வருமானம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது எழுந்துள்ள விலங்கு கொழுப்பு சர்ச்சை, சமூக வலைதங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சந்திரபாபு நாயுடு செய்த சம்பவம்
இந்த லட்டுப் பிரச்சனை குறித்து, ஜூன் மாதம் பதவியேற்ற உடனேயே, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முதல் நகர்வை எடுத்து வைத்தார். TTD என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் திருப்பதி திருமலை தேவஸ்தானமான நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷியாமளா ராவ் நியமிக்கப்பட்டார். திருப்பதி லட்டு தொடர்பாக வந்த பல்வேறு குற்றச்சாட்டு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, TTD பரிந்துரையின் பேரில், திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம், தயாரிப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக, 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவில், விஜயவாடாவில் உள்ள தேசிய பால் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுரேந்தர் தலைமையில், பால்வள ஆய்வு நிபுணர் பாஸ்கர் ரெட்டி, பெங்களூரிவில் உள்ள IIM நிறுவனத்தின் பேராசிரியர் மகாதேவன், தெலங்கானா கால்நடை பல்கலைக்கழகத்தின் டாக்டர் சொர்ணலதா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்தக்குழு பொறுப்பேற்றவுடன், தரம், மணம், சேர்க்கப்படும் பொருட்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அதன் பின், லட்டு தயாரிப்பில் முக்கிய இடம் பிடிக்கும் நெய் குறித்த சந்தேகம் எழுந்ததாகவும், அந்த நெய்யினை ஆய்வு செய்வதற்காக குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள தேசிய ஆய்வு நிறுவனத்திற்கு ஜூலை மாதம் 9-ம் தேதி அனுப்பி வைத்துள்ளனர். அதனுடைய அறிக்கை, ஜூலை 16-ம் தேதி வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து, தற்போதுதான் பூதாகரமாக ஆகியிருக்கிறது.
யாரிடமிருந்து நெய் சப்ளை ?
இந்தச்சூழலில் திருப்பதி லட்டுவிற்கு கடந்த ஆண்டு வரை, கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்துதான், நெய் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதனுடைய விலை அதிகமாக இருப்பதாகக் கூறி புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குறைந்த விலையில், அதாவது கிலோவுக்கு 320 ரூபாய் என நிர்ணயம் செய்திருந்த தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ. ஆர். டெய்ரி புட்ஸ் என்ற நிறுவனத்திற்கு நெய் வினியோகிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நெய்யில்தான் தற்போது விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்தவுடனேயே, இந்த நிறுவனத்தின் நெய் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அந்த நிறுவனத்தை TTD நிறுவனம், கருப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது. தற்போது, கிலோவுக்கு 475 ரூபாய் என்ற வகையில், கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் வாங்கப்படுகிறது.
அரசியல் விவாதமாக மாறிய லட்டு
இந்த லட்டுப் பிரச்சினை, பக்தர்கள் மனதில் பாதித்துள்ளதாக ஒருபக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் அரசியல் விவாதமாகவும் மாறியிருக்கிறது. ஆளும் தெலுங்கு தேச கட்சியை, முன்பு ஆண்ட ஒய். எஸ். ஆர். கட்சி மீதும் அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மறுபக்கத்தில், இது அரசியலுக்காக திட்டமிட்டு குற்றம் சுமத்தப்படுகிறது என்றும், நீதிபதி ஒருவரின் தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என பதிலடி தந்துள்ள ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இப் பிரச்சினையால், இரு கட்சி தொண்டர்களும் சமூக வலைதங்களில் அடிதடியே நடந்துக் கொண்டிருக்கின்றனர்.
பல ஒழுங்குமுறை விதிகள் மற்றும் தீவிர கண்காணிப்பின் அடிப்படையில்தான் லட்சணக்கணக்கான லட்டுகள் தினமும் TTD எனும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் தயாரிக்கபடுகின்றன. எனவே, வழக்கமான ஆய்வுகள் நடத்தப்படுவதும் அதை அதிகாரிகள் கண்காணிப்பதும் நிச்சயம் நடைபெறும். அப்போது நெய் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கும். அப்படியென்றால், எவ்வளவு காலமாக இது நடைபெறுகிறது, அதிகாரிகள் என்ன செய்தார்கள் என பல கேள்விகளை நெட்டிஸன்கள் எழுப்புகின்றனர்.
அரசியல் ரீதியாக மட்டுமின்றி, பக்தர்களின் கோபமும் தற்போது சமூக வலைதளங்களின் மூலம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளதால், லட்டுப் பிரச்சினை, இத்துடன் முடியப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.