பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்புக்கு நீண்ட காலமாக தலைவராக பதவி வகித்தவர் எம்.எஸ் கோல்வால்கர். கடந்த 1940ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்த இவரை, அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 'குருஜி' என அழைத்து வருகின்றனர்.


காங்கிரஸ் மூத்த தலைவர் போட்ட பதிவு:


இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய சிங், கோல்வால்கரின் புகைப்படத்துடன் அவரை பற்றிய சில கருத்துகளை கொண்ட புகைப்படத்தை நேற்று பதவிட்டிருந்தார். இதற்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகியும் அதன் விளம்பரத் துறைத் தலைவருமான சுனில் அம்பேகர், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படத்தைப் பதிவிட்டதாக திக்விஜய சிங் மீது குற்றம் சாட்டியுள்ளார். "இது அடிப்படையற்றது. சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இது போன்ற கருத்துக்களை கோல்வால்கர் ஒரு போதும் கூறவில்லை. சமூகப் பாகுபாடுகளை களைவதிலேயே தனது வாழ்க்கையை செலவழித்தார்" என சுனில் அம்பேகர் விளக்கம் அளித்துள்ளார்.


வழக்கறிஞரும் ஆர்எஸ்எஸ் நிர்வாகியுமான ராஜேஷ் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில், திக்விஜய சிங்குக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ (மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 469 (தீங்கை விளைவிக்கும் நோக்கில் மோசடி செய்தல்), 500 (அவதூறு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கடுமையாக சாடிய மத்திய பிரதேச முதலமைச்சர்:


இது தொடர்பாக, நேற்று இரவு இந்தூரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் போலீஸ் கமிஷனர் மகரந்த் தேவஸ்கர், "அந்த பதிவில் திங்விஜய சிங் கோல்வால்கருக்கு எதிராக சில கருத்துக்களைக் கூறியதாகக் கூறி எங்களுக்கு ஒரு புகார் வந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ராஜேஷ் ஜோஷி அளித்த புகாரில், "தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களிடையே மோதலை உருவாக்கி மக்களைத் தூண்டிவிடுவதற்காக கோல்வால்கரின் பெயர் மற்றும் படத்தைக் கொண்ட சர்ச்சைக்குரிய போஸ்டரை திக்விஜய சிங் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். திங்விஜய சிங்கின் பதிவு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் இந்து சமூகத்தின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.


திங்விஜய சிங்கை கடுமையாக சாடியுள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "தவறான தகவல்களை பரப்பி, தவறான பதிவைப் பகிர்வதன் மூலம் சமூக வெறுப்பை உருவாக்குகின்றார். சமூக வேறுபாடுகளை நீக்கி நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்க தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் கோல்வால்கர்" என்றார்.