வேட்பாளர்கள் வாக்காளர்களை எந்த வகையிலாவது கவர்ந்து வாக்கு சேகரிப்பதில் மற்ற கட்சியினரை மிஞ்சும் வகையில் எல்லா இடங்களிலும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. 


வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தின் கெடா மாவட்டத்தில்  நாடியாட் தொகுதியின் பாஜகவின் வேட்பாளர் ஒரு ரோபோவைப் பயன்படுத்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக அனைத்துமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவும் டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவித்து வருகிறது. இந்நிலைியல், குஜராத்தில் 1995ஆம் ஆண்டிலிருந்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. தற்போதைய பிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்திருக்கிறார்.


நாடியாட் தொகுதி வேட்பாளர் தேசாய்: நாடியாட் சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள பங்கஜ்பாய் தேசாய், ரோபோட்டை வைத்து டிஜிட்டல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். இரு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது. இதையடுத்து, வேட்பாளர்கள் சாலைகளில் இறங்கி இரு கரங்களையும் கூப்பி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கி விட்டனர்.


நாடியாட் தொகுதியில் இந்த ரோபோட் பற்றிதான் இப்போது எங்கும் பேசுபொருளாக உள்ளது. புதுமையான முறையில் இப்படியொரு தேர்தல் பிரசாரத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு வேட்பாளர் இவ்வாறு ரோபோட்டை பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.




குஜராத் தேர்தல்: 20 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக கிறிஸ்துவருக்கு சீட் வழங்கிய பாஜக


நாடியாட் மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ஹர்ஷில் படேல் கூறுகையில், "நாங்கள் ரோபோட்டை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு டிஜிட்டல் இந்தியா திட்டம் முன்னெடுக்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக ரோபோட்டை வைத்து பிரசாரம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு இந்த ரோபோட் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும்" என்றார்.






இந்தத் தொகுதி வேட்பாளர் தேசாய் கூறுகையில், "பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ஹர்சில்பாய் மற்றும் அவரது குழு இந்த ரோபோட்டை உருவாக்கினர். இது நமது கொள்கைகளை வாக்காளர்களுக்கு எடுத்துக்கூற உதவுகிறது. எங்களது ரோபாதான் இப்போது நகரின் பேசுபொருளார இருக்கிறது" என்றார்.