லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதியால் கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி பல இடங்களில் சோதனை நடத்தியதாக நாட்டின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் வீடுகள் உட்பட ஆறு இடங்களில்  இந்த வழக்கில் NIA இன் தொடர்ச்சியான விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும் மற்றொரு புறம் இது தொடர்பான ஆவணங்கள் தேடப்பட்டு வந்தது. NIA அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு சொந்தமான  இடங்கள் மட்டும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களுக்குச் சொந்தமான இடங்களிலும்  சோதனை செய்தது.


முகமது உமர், முகமது பைசல் ரப்பானி, தன்வீர் அகமது மற்றும் முகமது ஃபாரூக் மற்றும் ஜுனைத் அகமது ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள் அதாவது லேப்டாப், மொபைல் போன்கள், குற்றவியல் ஆவணங்கள் மற்றும் ரூபாய் 7.3 லட்சம் ஆகியவற்றை NIA அதிகாரிகள் கைப்பற்றினர் .





ஆவணங்கள் மற்றும் பணம் மட்டும் இல்லாமல் ஏழு கைத்துப்பாக்கிகள், நான்கு கைக்குண்டுகள், ஒரு மேகசின் மற்றும் 45 லைவ் ரவுண்டுகள், நான்கு வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் NIA அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பெங்களூரும் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது.  NIA அதிகாரிகள் ஆயூதங்களைக் கைப்பற்றியதை  அடுத்து பெங்களூரு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதால், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் NIA காவலில் எடுத்தது. 


முகமது உமர், முகமது பைசல் ரப்பானி, தன்வீர் அகமது, முகமது ஃபரூக் மற்றும் ஜுனைத் அகமது ஆகியோர் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, ​​லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியும் ஆயுள் தண்டனைக் கைதியுமான டி நசீருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்ஐஏ நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியான டி நசீர் மேற்குறிப்பிட்ட நபர்களை தீவிரவாத தாக்குதல்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர்களில் ஜுனைத் அகமது ஆயுள் தண்டனைக் கைதி டி நசீரின் வழிகாட்டுதலின் கீழ் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டியதை, என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.


2021 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த ஜுனைத், மறைத்து வைக்கப்பட்ட தகவல் தொடர்பு சாதங்கள் மூலம் மற்ற குற்றவாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். அவர் மற்றவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரிப்பதற்காக நிதியுதவி அளித்து அவர்களை பாதுகாப்பாக தனக்கு சொந்தமான இடத்தில் வைத்திருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.