நாடாளுமன்றத்தில் அத்துமீறி நபர்கள் நுழைந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி அவைக்குள் நுழைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியான துரிதமாக செயல்பட்ட எம்.பி.,கள் இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. அந்த சம்பவம் நடைபெற்று சரியாக 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதேநாளில் இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் நாடாளுமன்றம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட 2 நபர்கள் உட்பட மொத்தம் 4 பேர் இதில் கைது செய்யப்பட்டனர்.


இப்படியான நிலையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ‘முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்ற இந்த பாதுகாப்பு மீறல், நமது ஜனநாயக தூணான நாடாளுமன்றத்திற்கு ஆபத்தான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார். 






எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது. இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 


திமுக எம்.பி, கனிமொழி அளித்த பேட்டியில், ‘புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அமைப்பு பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தெரிகிறது. அவைக்குள் எளிதாக ஊடுருவக்கூடிய வகையில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இருக்கக்கூடிய அவையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றால் யார் தான் இதற்கு பொறுப்பு? ” என கேள்வியெழுப்பியுள்ளார்.






விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “லோக்சபா சபாநாயகர் நாற்காலியை நோக்கி, புகைக் குப்பிகளை வீச, தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, பார்லிமென்ட் பாதுகாப்பு மீறலை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.இந்த பயங்கரமான சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக விசாரணை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய நேரம் இது” என தெரிவித்துள்ளார்.