பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்றைய தினம் அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி அமெரிக்க நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார். தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். கமலா ஹாரிஸ் உலகம் முழுவதும் பலருக்கும் உந்து சக்தியாக திகழ்கிறார் என்றும் மோடி பாராட்டு தெரிவித்தார். அவர் விரைவில் இந்தியாவுக்கு வரவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.
தொடர்ந்து இருவரின் சந்திப்பு குறித்த ட்வீட் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்திய- அமெரிக்க உறவை பலப்படுத்தும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக குறிப்பிட்டு அதுதொடர்பான புகைப்படங்களையும் மோடி பதிவிட்டார்.
இந்நிலையில் அந்த ட்வீட்டில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி கமெண்ட் செய்துள்ளார். அதில், பிரதமர் மோடி ட்வீட் செய்திருப்பதுபோல துணை அதிபர் கமலா ஹாரிஸும் ட்வீட் செய்துள்ளாரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னதாக, ஆப்ரிக்காவின் சாம்பியா நாட்டு அதிபரை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியது குறித்து கமலா ஹாரிஸ் ட்வீட் செய்திருந்தார். அது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, “அவரை சந்தித்து பேசியதை குறித்து கமலா ஹாரிஸ் பதிவிட்டது போல நான் பார்த்த வரையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பதிவு செய்யவில்லை” என கமெண்ட் செய்துள்ளார்.