மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்றும் தொடர்ந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி தந்து பேசினார்.
"பொய்யான பிம்பத்தை உருவாக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்"
"நாட்டில் பிரதமர் மீதோ அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பொய்யான பிம்பத்தை உருவாக்கவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களை குழப்பவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், நாட்டின் எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை வெளிப்படுத்தும்.
அரசை காப்பாற்றுவதற்காக ஊழலில் ஈடுபடுவதே காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்கு) கூட்டணி அரசாங்கத்தின் குணம். ஆனால், பிரதமர் மோடியோ தினமும் 17 மணி நேரம் நாட்டுக்காக பணியாற்றி வருகிறார். ஒரு நாள் விடுப்பு கூட எடுக்காமல் சோர்வின்றி தொடர்ந்து உழைத்து வருகிறார். மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதால், இந்த அரசு செய்த பணிகளை நான் குறிப்பிட வேண்டும்.
"கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லாத ஒரு அமைப்பை உருவாக்குவோம்"
சுதந்திரத்திற்கு பிறகு, மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே அரசு பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான். மக்களால் மிகவும் விரும்பப்படும் பிரதமராக மோடி இருக்கிறார். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று அவர்கள் (காங்கிரஸ் கூட்டணி) தொடர்ந்து கூறி வருகிறார்கள். கடனைத் தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், ஒருவர் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லாத ஒரு அமைப்பை உருவாக்குவோம்.
விவசாயிகளுக்கு நாம் வழங்கியது இலவசங்கள் அல்ல. மாறாக அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றியுள்ளோம். பிரதமர் மோடி அரசு சில வரலாற்று முடிவுகளை எடுத்தது. வாரிசு அரசியல் மற்றும் ஊழலுக்கு முடிவு கட்டியுள்ளோம். காங்கிரஸ் கூட்டணியின் குணாதிசயம் அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதாகும். ஆனால், பாஜக கூட்டணி கொள்கையைப் பாதுகாக்க போராடுகிறது.
அவர்கள் (காங்கிரஸ் கூட்டணி) ஏன் ஜன்தன் யோஜனாவை எதிர்த்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்? மத்தியிலிருந்து ஏழைகளுக்கு 1 ரூபாய் அனுப்பப்படும்போது 15 பைசா மட்டுமே பயனாளிகளுக்குச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியிருந்தார். ஆனால், இன்று முழுத் தொகையும் ஏழைகளைச் சென்றடைகிறது.
இந்த நாட்டின் விவசாயிகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், குறைந்த பட்ச ஆதார விலையில் அதிகபட்ச அரிசியை கொள்முதல் செய்த அரசு ஒன்று இருந்தது என்றால் அது நரேந்திர மோடி அரசுதான்" என்றார்.