லடாக்கில் 52 ஆண்டு காலமாக நீடித்து வந்த பிரச்னை, சனிக்கிழமை அன்று கிட்டத்தட்ட தீர்வை நோக்கி சென்றுள்ளது.
கார்கிலில் சிறிய மடாலயம் கட்டுவது தொடர்பாக இரு தரப்புக்கிடையே பிரச்னை இருந்து வந்தது. 1969 ஆம் ஆண்டின் அரசாங்க உத்தரவின்படி, குர்பதாங் பீடபூமியில் உள்ள நிலம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டதே தவிர மத நோக்கங்களுக்காக அல்ல என கார்கில் பகுதி தலைவர்கள் வாதம் முன்வைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக, மடாலய பிரச்னை கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது. இச்சூழலில், மனமாற்றம் அடைந்த கார்கில் பகுதி தலைவர்கள், லேவை சேர்ந்த புத்த மத தலைவர்களிடம் 2 கனல் நிலத்தை ஒப்படைத்து கட்டுமான பணியை தொடங்குமாறு நேற்று கூறியுள்ளனர்.
இரண்டு பகுதிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில், "சிறிய மடாலயம் கட்டுவதற்காக கார்கிலில் உள்ள லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு சங்கம் மூலம் லடாக் புத்த சங்கத்திற்கு (எல்பிஏ) 2 கானல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. லடாக்கில் மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும், உலகளாவிய சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதற்கும் இணைந்து செயல்பட இரு அமைப்புகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி கார்கிலின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான சஜத் கார்கலி கூறுகையில், "நீண்ட கால பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்திருப்பதன் மூலம் நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறோம். லேவை சேர்ந்த பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இத்தகைய மோதல்கள் இருக்கும் பிற பிராந்தியங்கள், உணர்ச்சிகரமான சிக்கல்களை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை இதிலிருந்து கற்று கொள்ளலாம்" என்றார். லேவை சேர்ந்த ஆன்மீகத் தலைவரான பால்கா ரின்போச்சே தலைமையிலான பௌத்தர்கள், மடாலயம் கட்டக் கோரி கார்கில் நகரில் பேரணியை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர். இதையடுத்து, ஜூன் மாதம் அங்கு பதற்றம் நிலவியது. தற்போது, இதற்கு நேர்மாறாக சனிக்கிழமை அன்று அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
லடாக் பௌத்த சங்கம் (எல்பிஏ) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) ஆகிய இரண்டு பிரபலமான அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது ஒரு தீர்மானத்திற்கு வழிவகுக்கும் என்றும் கார்கில் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கார்கிலுக்கு அருகில் உள்ள முக்கியமான புத்த மையமான முல்பெக்கிற்கு லேவிலிருந்து 'எகோ பேட் யாத்ரா' என்ற பெயரில் யாத்திரை கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இது கார்கிலை நோக்கிச் செல்லத் திட்டமிடப்பட்டது. அங்கு கார்கிலைச் சேர்ந்த சில முஸ்லீம் மத அமைப்புகள் இந்த பேரணி இரு பிராந்தியங்களின் தலைமைக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி வேதனை தெரிவித்தன.
லடாக் பெளத்த சங்கம், பகுதியின் மூத்த தலைவரான துப்ஸ்டன் செவாங் தலைமையில் இயங்கி வருகிறது. லடாக்கிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட துப்ஸ்டன் செவாங் முன்னாள் பாஜக தலைவர் ஆவார். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் செவாங். லடாக் பெளத்த சங்கம், கார்கில் ஜனநாயக கூட்டணி இடையேயான ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்டவர் இவர்தான்.