பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் டயாப்பர் மாற்றும் ஆண்கள் அறை வைக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.


குழந்தை பராமரிப்பு:


பொதுவாகவே குழந்தைகள் பராமரிப்பு என்பது பெண்களை மட்டுமே சார்ந்தது என்று இந்திய சமூகம் பழகிவிட்ட நிலையில், குழந்தைகள் பராமரிப்பில் ஆண்களும் பங்கேற்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. மாறிவிட்ட காலத்திற்கேற்ப குழந்தைகள் பராமரிப்பில் ஆண்களும் கொஞ்சம் கொஞ்சமாக பங்கேற்கத் தொடங்கியிருக்கின்றனர். குழந்தைகள் பராமரிப்பில் முக்கியமானது குழந்தைகளுக்கு டயாப்பர் மாற்றுவது. என்ன தான் குழந்தைகள் பராமரிப்பில் ஆண்கள் பங்கேற்றாலும் டயாப்பர் மாற்றும் பிரிவு மட்டும் பெண்களிடமே இருந்து வருகிறது.


விமானநிலையத்தில் டயாப்பர் மாற்றும் அறை:


பொது இடங்களிலும் குழந்தைகள் அணிந்திருக்கும் டயாப்பர் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பெண்கள் தான் அதை செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் டயாப்பர் மாற்றுவதற்கான ஆண்கள் அறை பிரத்யேகமாக நிறுவப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


சுகதா என்ற பெண் சமூக வலைதளத்தில் டயாப்பர் மாற்றும் அறையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதோடு, “இதை நாம் கொண்டாட வேண்டும். டயாப்பர் மாற்றும் அறையை பெங்களூரு விமான நிலையத்தில் கண்டேன். குழந்தைகள் பராமரிப்பு என்பது பெண்களின் கடமை மட்டும் இல்லை” என்று கூறியிருந்தார்.






நன்றி தெரிவித்த விமானநிலைய நிர்வாகம்:


இதற்கு பதிலளித்துள்ள பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் “உங்களது பாராட்டுக்கு நன்றி சுகதா. எங்களது ஓய்வறையில் டயாப்பர் மாற்றும் அறை என்பது ஒரு வசதி. பாலின பேதமில்லாமல் ஆண், பெண் என்று இரண்டு பாலினத்தவருக்கும் அறைகள் உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயாப்பர் மாற்றுவதற்கான அடக்கமான, ப்ரைவசியுடன் கூடிய அறைகள் உள்ளன” என்று கூறியுள்ளது.






பெங்களூரு விமான நிலையத்தில் டயாப்பர் மாற்றும் அறை மட்டும் இல்லாமல், குழந்தைகள் பராமரிப்பு அறை என்ற பிரத்யேக அறை ஒன்று உள்ளது. என்று மற்றொருவர் கூறியுள்ளார்.






விமான நிலையத்தில் இந்த வசதி இருப்பதை முற்போக்கு சிந்தனை என்று  பலர் கூறியிருந்தாலும், இதைக் கொண்டாடத் தேவையில்லை பதிலாக இதை பரவலாக்குங்கள். விமான நிலையத்தில் மட்டுமில்லாமல் எல்லா பொது இடங்களிலும் வையுங்கள். குழந்தை பராமரிப்பு என்பது ஆண்களுக்கும் உரியது என்பதை உணர்த்துங்கள் என்று கூறி வருகின்றனர்.