இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.1 கோடி ஆக (101 மில்லியன்) அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR- Indian Council of Medical Research) வெளியிடுள்ள ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


லான்சென்ட் ஆய்வு:


உலகம் முழுவதும் நீரிழிவு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவ உலகம் எச்சரித்து வருகிறது. அதோடு, இது தொடர்பான ஆய்வு கட்டுரைகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சிகரமான தகவல்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டுள்ள ஆய்வு கட்டுரை பிரிட்டன் மருத்து ஆய்வு இதழான ’Lancet’ என்பதில் வெளியாகி உள்ளது. 


இதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, தொடர்ந்து அதிகரித்து வரும் நீரிழிவு பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. 


இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு பாதிப்பு


இந்தியாவில் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2019-ல் 7 கோடியாக இருந்த எண்ணிக்கை,நான்கு ஆண்டுகளில் 44% அதிகரித்துள்ளது. இந்தியாவில் சராசரியாக 15.3 சதவீதம் பேர் 13.6 கோடி பேருக்கு ‘prediabetes’ இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதிகளவிலான பாதிப்பு


இந்தியாவில் கோவா, புதுச்சேரி,கேரளா, சண்டிகர், டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், சிக்கிம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக நீரிழிவு பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்களாகும்.


கோவா - 26.4%, புதுச்சேரி 26.3%, கேரளா - 25.5%, என மூன்றும் அதிகளவில் நீரிழிவு பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழ்நாடு, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட நீரிழிவுக்கு முந்தைய நிலையின் எண்ணிக்கை குறைந்த அளவு உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


’Madras Diabetes Research Foundation’ என்ற அமைப்பின் தலைவர் ரஞ்சித் மோகன் அஞ்சனா என்பவர் மேற்கொண்ட ஆய்வில், குறைவான நீரிழிவு பாதிப்புகளை கொண்டுள்ள மாநிலங்களில், நீரிழிவிற்கு முந்தைய நிலை பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டிலேயே உத்தரபிரதேசம் மாநிலத்தில் 4.8% நீரிழிவு பாதிப்பு பதிவாகியுள்ளது இதுவே குறைவானது. ஆனால், தேசிய சராசரியான 15.3%-த்துடன் ஒப்பிடுகையில் இம்மாநிலத்தில் 18% நீரிழிவு முந்தைய நிலையின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் மட்டும் நீரிழிவு பாதிப்புகள் உள்ளவர்களை விட ஒவ்வொரு நான்கு பேர் நீரிழிவு முந்தைய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், நீரிழிவு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இது டைப்-2 நீரிழிவு என்று சொல்ல கூடிய அளவிற்கு அதிகளிவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகிய காரணங்களால் குழந்தைகள், வளரிளம் பருவத்தில் உள்ளவர்கள் ஆகியோர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகவும், இவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் நீரிழிவு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் மருத்துவ உலகம்,” ’rule of thirds’ என்ற முறையில் இதை குறிப்பிடலாம். அதாவது மூன்றில் ஒருவருக்கு (Pre-diabetic- நிலை உள்ளவர்கள்) நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் ப்ரீ ட்யபடிக் நிலையில் உள்ளவர்களாகவே இருப்பார்கள். இன்னும் சிலர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம்,உடற்பயிற்சி உள்ளிட்டவைகளால் நீரிழிவை கட்டுக்குள் கொண்டு வரலாம்.


இந்த ஆய்விற்காக கடந்த 2008,அக்டோபர்,18 முதல் 2020.,டிசம்பர்,17 வரையிலான காலகட்டத்தில் கிராம மற்றும் நகர் புற பகுதிகளில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஆய்வில் நீரிழிவு பாதிப்புகள் மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன் ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.